சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி- திருவண்ணாமலை கோயிலில் லட்டு பிரசாதம் நிறுத்தம்
Top Tamil News March 22, 2026 02:48 PM

வணிக பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக அண்ணாமலையார் கோவிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யக்கூடிய இலவச லட்டு பிரசாதம் முற்றிலும் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து 14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் ஈரான் போர் காரணமாக நாடு முழுவதும் எல்பிஜி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விற்பனை மிகவும் குறைக்கப்பட்டு மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியங்களுக்கு மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் மட்டும் ஒரு குடும்பத்திற்கு 21 நாட்களுக்கு ஒரு முறை ஒரு சிலிண்டர் என விநியோகம் செய்யப்படும் என நிர்வாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக திருவண்ணாமலை நகரில் ஏற்கனவே சிறு குறு உணவகங்கள் மற்றும் மெஸ் போன்ற உணவகங்கள் மூடப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பொருத்தவரை பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக லட்டு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. அதுமட்டும் இன்றி வருகின்ற பக்தர்களுக்கு முறுக்கு, எள்ளு வடை, அதிரசம், லட்டு உள்ளிட்டவைகள் 50 ரூபாய்க்கு பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் புளிசாதம் மற்றும் சக்கரை பொங்கல் போன்றவை 10 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் கிடைக்காததால் கடந்த சில நாட்களாகவே எண்ணெயில் தயார் செய்யக்கூடிய விற்பனை பிரசாதங்களான முறுக்கு, எள்ளு வடை, லட்டு, அதிரசம் போன்றவை முற்றிலும் விற்பனை நிறுத்தப்பட்டது. புளி சாதம் மற்றும் சக்கரை பொங்கல் உள்ளிட்டவை மட்டும் விற்பனைக்காக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு இலவசமாக வழங்கக்கூடிய லட்டு பிரசாதம் கடந்த இரு தினங்களாகவே நிறுத்தப்பட்டுள்ளது. 

அண்ணாமலையார் கோவிலில் கடந்த மூன்று ஆண்டு காலமாக சாமி தரிசனம் முடித்து திருமஞ்சனம் கோபுர வீதி வழியாக வெளியே வரக்கூடிய பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக முற்றிலும் சிலிண்டர்கள் ஏதும் கோவில் நிர்வாகத்திற்கு கேஸ் ஏஜென்சிகள் வழங்கப்படாததால் முன்பதிவு செய்யப்பட முடியாததால் இரண்டு நாட்களாகவே இலவச லட்டு பிரசாதம் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. கோவிலுக்கு தரிசனம் பக்தர்கள் இலவச லட்டு பிரசாதம் நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர். ஆகவே வருகின்ற பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் இலவசமாக விநாயகம் செய்யக்கூடிய லட்டு பிரசாதத்தை எந்தவிதமான தடையும் இன்றி வழங்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.