கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிதான் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ-வாக இருக்கும் தொகுதி. கடந்த 18-ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த நேர்காணலில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மனோ தங்கராஜிக்கு எதிராக ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் கொந்தளித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிலும் பத்மநாபபுரம் தொகுதியைச் சேர்ந்த புதியவருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என வலுவாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொகுதியைச் சேர்ந்தவருக்கே சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்க காரணம் குறித்து தி.மு.க திருவட்டாறு தெற்கு ஒன்றிய செயலாளர் ஜான் பிரைட் நம்மிடம் கூறுகையில், "பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் இதற்கு முன்பு தி.மு.க-வைச் சேர்ந்த தியோடர் ரெஜினால்ட், டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் போன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள் எம்.எல்.ஏ-க்களாக இருந்தனர். அப்போது கட்சி சம்பந்தமாகவும், தொகுதி மக்களின் பிரச்னைக்காகவும் அவர்களை எளிதில் அணுக முடிந்தது.
ஸ்டாலின் தலைமையில் நடந்த நேர்காணல்
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரைச் சேர்ந்தவர். அவரை மாவட்டச் செயலாளர் ஆக்கவும், எம்.எல்.ஏ ஆக்கவும் உழைத்தவர்கள் நாங்கள். ஆனால், அவர் அமைச்சர் ஆனதும் முகாம் அலுவலகத்தை கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட பாலூரில் உள்ள அவரது வீட்டுக்கு மாற்றிவிட்டார். பத்மநாபபுரம் தொகுதிக்குள் ஒரு கட்சி அலுவலகம் உள்ளது, அதில் அவரை பார்க்க முடியாது. சென்னை சென்று பார்த்தால் 'இங்கு ஏன் வந்தீர்கள், எனக்கு ஆயிரத்தி எட்டு வேலை இருக்கிறது' என்பார். பத்மநாபபுரம் தொகுதியைத் தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலூரில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றால் 'மகனை பார்த்து கோரிக்கையை சொலுங்கள்' என்பார். மகனை பார்த்து கோரிக்கை வைக்கவா நாங்கள் அவருக்காக தேர்தல் பணி செய்தோம். கட்சி நிர்வாகிகளுக்காகவும் அவர் எதுவும் செய்யவில்லை. பொதுமக்களுக்காகவும் எதுவும் செய்யவில்லை. தொகுதியைச் சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தால் எளிதில் அணுக முடியும்" என்றார்.
மனோ தங்கராஜ்
இதுபற்றி அமைச்சர் மனோ தங்கராஜ் தரப்பைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், "கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் கட்சியில் முக்கிய பதவியை வாங்கிக்கொண்டு சென்னையில் இருந்துகொண்டு பத்மநாபபுரத்தில் போட்டியிட காய் நகர்த்துகிறார். அதற்காக சிலரை அமைச்சருக்கு எதிராக வேலைசெய்ய தூண்டிவிடுகிறார். அமைச்சருக்கு எதிராக உடன்பிறந்த தம்பியை வைத்து வீடியோ போட வைப்பதன் பின்னணியிலும் அந்த முன்னாள் எம்.எல்.ஏ உள்ளார். கடந்த தேர்தல் சமயத்திலும் இதுபோன்ற பிரச்னைகளை மனோ தங்கராஜிக்கு எதிராக எழுப்பினர். அதை புரிந்துகொண்டு தலைமை சீட் வழங்கியது. இந்த முறையும் அமைச்சர் மனோ தங்கராஜிக்கு தலைமை சீட் வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றனர்.