தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக இருந்தவர் சரத்குமார். 1996-இல் திமுகவில் இணைந்ததன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். தொடர்ந்து, 2001ஆம் ஆண்டு திமுகவில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில்தான், கட்சித் தலைவர்களுடன் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக திமுகவில் இருந்து 2006 ஆண்டு விலகிய அவர், அந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக பரப்புரை செய்தார்.
தொடர்ந்து, 2007ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார். 2011-இல் அதிமுகவுடன் கூட்டணி வைத்து அக்கட்சி 2 இடங்களில் வெற்றிபெற்றது. சரத்குமார் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ ஆனார். தொடர்ந்து, 2016 தேர்தலில் அதே அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட சரத்குமார் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொண்டு அக்கட்சியில் இரு ஆண்டுகளாக பயணித்து வருகிறார். ஆனாலும், பாஜகவில் அவருக்கான உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என மாநில மற்றும் தேசியத் தலைமையின் மீது தொடர்ந்து அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஒரு மாத காலமே இருக்கும் சூழலில், தனக்கும் தனது ஆதரவாளர்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு சரத்குமார் வாய்ப்பு கேட்டிருந்ததாகவும் அதற்கு பாஜக இன்னும் உரிய பதில் தரவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், தனது ஆதரவாளர்களுடன் சென்னை தி நகரில் உள்ள தனியார் மஹாலில் சரத்குமார் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தொண்டர்கள் பலரும் சரத்குமாருக்கு பதவி வழங்க வேண்டும் எனவும் இல்லையென்றால், மீண்டும் சமத்துவ மக்கள் கட்சி தொடங்கி பாஜகவில் இருந்து விலக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சரத்குமார், ”எனக்கும் இந்த ஆதங்கம் இருக்கிறது. பாஜகவில் இணைந்து 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனாலும், உரிய பதவி கொடுக்கப்படவில்லை. கட்சியில் இணையும்போது, தேசியப் பொறுப்பு தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. இனிமேலும் என்னால் பொறுமையாக இருக்க முடியாது; நான் யாருக்கும் பயந்தவன் கிடையாது. இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவரிடம் பேசுவோம். நம் கட்சி சார்பில் முன்னோடிகள் பாஜக மாநிலத் தலைவரிடம் கடிதம் கொடுத்து கோரிக்கை வையுங்கள். அதன் முடிவின் பிறகு பாஜகவில் இருந்து விலகுவது குறித்து இறுதி முடிவெடுக்கலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
நாளை பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் தமிழகம் வரவிருக்கும் நிலையில், அவரைச் சந்தித்தும் இதுகுறித்து பேசவிருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சரத்குமார் பாஜகவின் தேசியத் தலைமை மற்றும் மாநிலத் தலைமை மீது அதிருப்தியில் இருப்பது தெரியவருகிறது. இதற்கிடையே, அவர் திமுகவில் இணையவிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.