ஏப்ரல் 1 முதல் விமானக் கட்டணம் உயருகிறதா?
Seithipunal Tamil March 23, 2026 07:48 PM

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பயணக் கட்டணங்கள் கணிசமாக உயருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் மற்றும் விமானத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியத் தகவல்கள்:
கட்டண உச்சவரம்பு நீக்கம்: விமானச் சேவை பாதிப்பைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு விதித்திருந்த விமானக் கட்டண உச்சவரம்பை (Fare Cap), நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் திடீரென நீக்கியுள்ளது. இதனால் விமான நிறுவனங்களே தங்களின் தேவையைப் பொறுத்துக் கட்டணத்தை நிர்ணயிக்க முடியும்.

எரிபொருள் விலை உயர்வு: வளைகுடா நாடுகளில் (ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா) ஏற்பட்டுள்ள போர்ச் சூழலால், கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விமான எரிபொருளின் (ATF) விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

விமான எரிபொருள் விலை உயர்வால் கட்டணங்களை உயர்த்துவது தவிர வேறு வழியில்லை என்பதை மத்திய சிவில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

தாறுமாறான உயர்வு: உச்சவரம்பு நீக்கப்பட்டதாலும், எரிபொருள் விலை அதிகரித்ததாலும் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் விமானக் கட்டணங்கள் வழக்கத்தை விடப் பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில் கோடை விடுமுறை மற்றும் தேர்தல் பணிகள் காரணமாகப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்பதால், இந்தக் கட்டண உயர்வு பயணிகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.