சிறிய உயர்வுக்குப் பின் தங்கம் மீண்டும் வீழ்ச்சி பாதையைத் தொடந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில் தங்க விலை ஏற்றத் தாழ்வுகளால் பரபரப்பை ஏற்படுத்தியது.
காலை நேரத்தில் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், மாலைப்பொழுதில் மேலும் ரூ.280 சரிந்தது. பின்னர் லேசான உயர்வை கண்ட தங்கம், இறுதியில் ஒரு கிராம் ரூ.13,340 என்ற அளவில் நிலைபெற்றது.

இந்நிலையில், இன்று (மார்ச் 24) விலை மீண்டும் சரிவை சந்தித்து, பவுனுக்கு ரூ.2,720 வரை திடீர் குறைவை பதிவு செய்துள்ளது. இது நகை வாங்கத் திட்டமிட்டவர்களுக்கு சற்றே சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
சர்வதேச அரசியல் பதற்றங்கள், குறிப்பாக ஈரான் தொடர்பான மோதல்கள், எரிபொருள் சந்தையில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகள் எரிபொருள் கையிருப்பை அதிகரிக்க முனைந்துள்ளன.
இதன் தாக்கமாக அமெரிக்க டாலரின் மதிப்பு வலுப்பெற்று, முதலீட்டாளர்கள் தங்கத்தை விட டாலரில் முதலீடு செய்ய முனைகின்றனர். இதனால் தங்கத்தின் மீதான தேவை குறைந்து, விலை சரிவை நோக்கி நகர்கிறது.தற்போதைய சந்தை நிலவரப்படி, சென்னையில் 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல், வெள்ளி விலையும் குறைந்து, கிராமுக்கு ரூ.10 சரிவுடன் ரூ.240-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.