விழுப்புரம் அதிமுக உட்கட்சி மோதலால் விழுப்புரம் தெற்கு நகர செயலாளராக இருந்த பசுபதி சிவி சண்முகத்தின் மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அதிமுகவிலிருந்து இன்று விலகினார். சிவி சண்முகத்தின் சகோதரன் ராதாகிருஷ்ணன் தலையீடு அதிகமாக உள்ளதாகவும் சிகரெட்டினை ஊதி முகத்திலேயே ஊதுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதிமுகவில் சி.வி சண்முகத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கிய விழுப்புரம் அதிமுக நகர செயலாளர் பசுபதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக சட்டமன்ற வேட்பாளர் விவகாரத்தில் சி.வி.சண்முகம் தன்னிச்சையாக முடிவெடுப்பதாக கூறி நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பசுபதி, சண்முகத்திற்கு எதிரான அடுக்கடுக்காக குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பசுபதி, அதிமுக கட்சியில் வழங்கப்பட்ட நகர செயலாளர் பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதற்கான கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்ப உள்ளேன். தொடர்ந்து அதிமுகவில் பயணிக்க விரும்பதாகவும், மாற்று கட்சியிலிருந்து அழைப்புகள் வந்தாலும் வேறொரு கட்சிக்கு செல்ல மாட்டேன். இரட்டை இலை சின்னத்திற்கு தான் வாக்களிக்க உள்ளதாகவும், தனது ஆதரவாளர்களையும் இரட்டை இலைக்கே வாக்களிக்க வலியுறுத்துவேன் எனக் கூறினார்.
அதிமுகவில் சிவி சண்முகம் தொடர்ந்து தன்னையும் கட்சியினரையும் அவமானம் செய்து வருவதால் மன உளச்சலில் இருந்ததால் ராஜினாமா செய்வதாகவும் அதிமுகவில் சி.வி.சண்முகத்தின் சகோதரன் சி.வி.ராதாகிருஷ்ணன் கட்சியில் தலையீடு அதிகமாக உள்ளதால் தான் கடந்த முறை விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகம் தோல்வி அடைந்ததாக தெரிவித்தார். மேலும் ராதாகிருஷ்ணன் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் சிகரெட்டினை பற்ற வைத்து முகத்திலேயே ஊதுவதாகவும், மரியாதை இல்லாமல் பேசுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலில் மீட்டும் அதிமுக எடப்பாடி ஆட்சி அமைக்க வேண்டும் என்பது தான் தனது ஆசை என்றும் தன்னை போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் வன்னியரும், பட்டியலின சமூக மக்கள் பெரும்பாலும் உள்ள நிலையில் பட்டியலின சமூகத்தினருக்கு ஒரு ஒன்றிய செயலாளர் பதவி கூட மாவட்டத்தில் வழங்கவில்லை இல்லை, ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள உடையார் சமூகத்திற்கு 5 ஒன்றிய செயலாளர் பதவி கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டினார்.