மத்திய கிழக்கு போரால் ஹார்முஸ் நீரிணையில் நிலவரம் கலவரமாக இருக்க, இந்தியாவிற்கு மட்டும் எந்த பிரச்னையும் இல்லை. ஆம், ஏற்கனவே சில கப்பல்கள் எண்ணெயுடன் இந்தியா வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு எரிவாயு கப்பல்கள் ஹார்மஸை கடந்து இந்தியாவை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. இதனால், இந்தியாவிற்கு உடனடியாக எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் சற்று குறைந்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த பைன் கேஸ் எல்பிஜி கப்பலின் காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரும் பதற்றத்திற்கு மத்தியில், 92,612.59 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றிச் சென்ற ஜக் வசந்த் மற்றும் பைன் கேஸ் ஆகிய இரண்டு இந்திய எல்பிஜி கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் முறையே 33 மற்றும் 27 இந்திய மாலுமிகள் உள்ளனர். இந்தக் கப்பல்கள் இந்தியாவிற்கு வரவிருக்கின்றன. மேலும், மார்ச் 26 முதல் 28-ம் தேதிக்குள் துறைமுகங்களை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Visuals of Pine Gas LPG Carrier, which crossed the Strait of Hormuz
— ANI (@ANI) March 24, 2026
Two Indian LPG carriers, Jag Vasant and Pine Gas, carrying 92,612.59 MT of LPG, have transited through the Strait of Hormuz. The vessels have 33 and 27 Indian seafarers onboard, respectively. These vessels are… pic.twitter.com/nkc12f3Tnh
இதற்கு முன்னதாக, சுமார் 92,712 டன் எல்பிஜி-யை ஏற்றிக்கொண்டு, எம்டி ஷிவாலிக் மற்றும் எம்டி நந்தா தேவி ஆகிய கப்பல்கள் இந்திய கரையை பாதுகாப்பாக வந்தடைந்தன. எல்பிஜி ஏற்றிவந்த ஷிவாலிக் கப்பல் மார்ச் 16 அன்று குஜராத்தின் முந்த்ராவை வந்தடைந்தது. இந்நிலையில், மற்றொரு எல்பிஜி கப்பலான நந்தா தேவி, மறுநாள் குஜராத்தின் காண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது.
இரண்டு எல்பிஜி கப்பல்களும் மார்ச் 13-ம் தேதி அன்று பயணத்தை தொடங்கி, மார்ச் 14 அன்று அதிகாலையில் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்தன. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 80,886 டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு, இந்தியக் கொடியுடன் கூடிய 'ஜக் லாட்கி' என்ற எண்ணெய்க் கப்பல், மார்ச் 18 அன்று முந்த்ராவை வந்தடைந்தது.
இதேபோல், ஓமானிலிருந்து ஆப்பிரிக்காவிற்கு பெட்ரோலை ஏற்றிச் செல்லும் ஜக் பிரகாஷ் என்ற மற்றொரு டேங்க்கர், முன்னதாகவே ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக கடந்து, தான்சானியா நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
போர் மண்டலத்தில் எஞ்சியுள்ள 24 இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல்களில், 22 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியின் மேற்கு பக்கத்திலும், அவற்றில் 611 மாலுமிகளும் உள்ளனர். இரண்டு கப்பல்கள் கிழக்கு பக்கத்திலும் உள்ளன. இந்த கப்பல்களில் இருந்த 11 மாலுமிகள் இந்தியாவிற்கு திரும்பிவிட்டதால், மாலுமிகளின் எண்ணிக்கை 600-ஆகக் குறைந்துள்ளதாக, இந்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எப்படியோ, அனைத்து நாடுகளுடனுமே இந்தியா நட்பு பாராட்டி வருவதால், கடும் போருக்கு மத்தியிலும், இந்தியாவிற்கு தேவையான எண்ணெய் மட்டும் தடையின்றி வந்துகொண்டிருப்பது, இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் ஒரு விஷயம் தான். ஏனெனில், எரிபொருள் மற்றும் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டால், கொரோனா கால சூழல்கள் போன்ற ஒரு சூழலை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்று பிரதமரே கூறியிருக்கும் நிலையில், இந்த செய்தி நிச்சயம் ஒரு நல்ல செய்தி தான்.