தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளில் தனிநபர் ஒருவருக்கு விற்கப்படும் மதுபானங்களின் அளவைக் கட்டுப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறி அதிகப்படியான விற்பனையில் ஈடுபடும் ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் மதுபானங்கள் பதுக்கப்படுவதைத் தவிர்க்கவும், வாக்காளர்களுக்கு விநியோகிப்பதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு நபர் வாங்கக்கூடிய மதுபானங்களின் அளவு பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது:
வெளிநாட்டு மதுபானம்: அதிகபட்சமாக 4.5 லிட்டர் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். அதாவது, 750 மி.லி அளவுள்ள 6 முழு பாட்டில்கள் அல்லது 375 மி.லி கொண்ட 12 அரை பாட்டில்கள் அல்லது 180 மி.லி கொண்ட 24 கால் பாட்டில்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
பீர்: ஒரு நபருக்கு 12 பாட்டில்கள் (650 மி.லி) அல்லது மொத்தம் 7.8 லிட்டர் வரை மட்டுமே விற்பனை செய்ய அனுமதி.
ஒயின்: அதிகபட்சமாக 9 லிட்டர் வரை ஒரு நபர் வாங்கலாம்.
இந்த புதிய கட்டுப்பாடுகளைக் கண்டிப்புடன் பின்பற்றுமாறு அனைத்து மாவட்ட மேலாளர்களும் அந்தந்தக் கடை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர். டாஸ்மாக் விற்பனை முழுவதும் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பு மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒரே ரசீதில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாக மதுபானம் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட இருப்பை விட 50 சதவீதத்திற்கும் கூடுதலாக மதுபானங்களைச் சேமித்து வைப்பதற்கும், கடை நேரத்திற்குப் பிறகு சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நிலவிய குழப்பங்களைத் தவிர்க்கும் வகையில், ‘மொத்த விற்பனை’ என்பதற்கு இம்முறை தெளிவான வரையறையை டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.