தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கோவை மாவட்டத்தில் தொகுதிப் பங்கீடு விவகாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை ஈச்சனாரி பகுதியில் அக்கட்சியினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில், முக்கியத் தொகுதியான கிணத்துக்கடவை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுக்கக் கூடாது என்றும், அங்கு தாமரை சின்னமே போட்டியிட வேண்டும் என்றும் தொண்டர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர்.
இந்தத் திடீர் போராட்டத்தால் பொள்ளாச்சி – கோவை சாலையில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மறியலில் ஈடுபட்ட பாஜகவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.
தேர்தலுக்கு முன்பே தொகுதி ஒதுக்கீட்டில் பாஜக தொண்டர்கள் காட்டும் இந்த ஆக்ரோஷம், கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.