(இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது)
2026 ஐபிஎல் தொடர் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
10 அணிகள் விளையாடும் இந்த ஐபிஎல் தொடர் மொத்தம் 13 நகரங்களில் நடக்கிறது. லீக் சுற்றில் மொத்தம் 70 போட்டிகள் நடக்கும். அதன்பிறகு பிளே ஆஃப் சுற்றில், குவாலிஃபயர் 1, எலிமினேட்டர், குவாலிஃபயர் 2 மற்றும் இறுதிப் போட்டி ஆகியவை நடைபெறும்.
ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். அதில் 7 போட்டிகளில் தங்கள் ஹோம் கிரவுண்டிலும், மற்ற 7 போட்டிகளை எதிரணிகளின் ஹோம் கிரவுண்டிலும் ஆடுவார்கள்.
டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கேப்டன்கள் சொன்னது என்ன?டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பட்டிதார், "இது ஒரு சீசன் தொடக்க ஆட்டம். அதனால் பிட்ச் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். கடந்த சீசனிலிருந்து நிறைய சாதகமான விஷயங்கள் உள்ளன. நாங்கள் எதையும் தற்காத்துக் கொள்ளப் போவதில்லை, ஐபிஎல் 2026-லும் நாங்களே வெற்றி பெறுவோம். [காயங்கள் பற்றி] அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர், அதேபோல் மாற்று வீரர்களும் சிறப்பாக உள்ளனர். வீரர்கள் அனைவரும் உடற்தகுதியுடன் இருக்கிறார்கள், மருத்துவக் குழு அவர்களைக் கவனித்து வருகிறது" என்று கூறினார்.
சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் முழு உடல் தகுதியுடன் இல்லாததால் இஷான் கிஷன் தற்காலிகமாக அந்த அணியின் கேப்டனாக செயல்படுகிறார். டாஸின் போது பேசிய அவர், "நாங்களும் முதலில் பந்துவீசவே (fielding) விரும்பினோம். எங்களின் உள்ளுணர்வை நம்பி விளையாட நினைக்கிறோம். இது ஐபிஎல் என்பதால் புதிதாக எதையும் தொடங்க வேண்டிய அவசியமில்லை. எங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தினாலே போதும். பேட் கம்மின்ஸ் நிச்சயமாகச் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர், ஆனால் மற்ற அனைவரும் நல்ல ஃபார்மில் இருப்பதாகவே தோன்றுகிறது; இந்த முறை நாங்களே வெற்றி பெறுவோம் என்று உணர்கிறேன்." என்று கூறினார்.
இரு அணிகளிலும் இடம்பெற்றிருக்கும் வீரர்கள்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபில் சால்ட், ரஜத் பட்டிதார் (கேப்டன்), ஜித்தேஷ் ஷர்மா (கீப்பர்), டிம் டேவிட், ரொமாரியோ ஷெபர்ட், குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், அபிநந்தன் சிங், ஜேக்கப் டஃபி, சுயாஷ் ஷர்மா.
இம்பேக்ட் வீரர்கள்: தேவ்தத் படிக்கல், ஜேக்கப் பெதெல், ரஷிக் சலாம், கனிஷ்க் சௌஹான், வெங்கடேஷ் ஐயர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஹெய்ன்ரிக் கிளாசன், நித்திஷ் குமார் ரெட்டி, அனிகேத் வெர்மா, சலில் அரோரா, ஹர்ஷ் துபே, இஷான் மலிங்கா, ஹர்ஷல் பட்டேல், ஜெய்தேவ் உனத்கட்.
இம்பேக்ட் வீரர்கள்: ஷிவாங் குமார், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் பெய்ன், ஆர் ஸ்மரன், சகிப் ஹுசெய்ன்.
ஆர்சிபி அணி முதலில் பந்துவீசுவதால், அவர்கள் அடுத்ததாக பேட்டிங் செய்யும்போது படிக்கல் அல்லது வெங்கடேஷ் ஐயர் இருவரில் ஒருவர் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்கலாம்.
சன்ரைசர்ஸ் அணியில் அவர்கள் பந்துவீசும்போது சலில் அரோரா, ஷிவாங் குமார், டேவிட் பெய்ன் ஆகிய பௌலர்களில் ஒருவரை அவர்கள் பயன்படுத்த வாய்ப்பு அதிகம். ஒருவேளை முதல் இன்னிங்ஸின் போது பேட்டிங் தேவைப்பட்டால் லியாம் லிவிங்ஸ்டனையும் களமிறக்கலாம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு