சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள சமீபத்திய வானிலை அறிக்கையில், தமிழகத்தில் மாற்றம் கொண்ட காலநிலையை சுட்டிக்காட்டுகிறது. தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த சில நாட்களில் வானிலையில் சிறிய மாற்றங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 28-ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில், குறிப்பாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 29-ஆம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மற்ற பகுதிகளில் வெப்பம் நீடிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 30-ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களிலும், மலைப்பகுதிகளிலும் லேசான மழை சாத்தியம் காணப்படுகிறது.
வெப்பநிலை நிலவரத்தைப் பொருத்தவரை, மார்ச் 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்.
ஆனால் மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை வெப்பநிலை படிப்படியாக குறைந்து, இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் 24 முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.