'தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்' : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்
BBC Tamil March 28, 2026 11:48 PM
Anna University

மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் காவல்துறை கைது செய்துள்ளது.

தன்னுடைய குடும்ப கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதுபோல பேராசிரியர் தொடர்ந்து அத்துமீறியதாக, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாணவி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் போராடிய நிலையில், இரண்டு பிரிவுகளில் பேராசிரியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

BBC தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகார் மனுவில், கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் பேராசிரியர் ஞானவேல் பாபு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

'என்னுடைய நண்பர்களுடன் வெளியில் செல்வதை தவறாக இணைத்துப் பேசி வருகிறார். அவர் எப்போதும் இரவு 10 மணிக்கு மேல் போன் கால் செய்வார். தொடக்கத்தில் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை' எனப் புகார் மனுவில் மாணவி தெரிவித்துள்ளார்.

'நான் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது குடும்ப கஷ்டத்தை உணர்ந்து கொண்டு உதவி செய்ய முன்வந்தார். 'நான் உனக்குத் தந்தை போன்றவர்' எனக் கூறிக் கொண்டே அவர் தவறுகள் செய்ய ஆரம்பித்தார்' எனப் புகார் மனுவில் அவர் கூறியுள்ளார்.

'அவர் தவறான கண்ணோட்டத்தில் என்னைப் பார்த்து வந்தது தனக்குத் தெரியாது' எனப் புகாரில் கூறியுள்ள மாணவி, 'காலப்போக்கில் என்னை மனதளவில் துன்புறுத்தினார். மூன்றாம் ஆண்டு தொடக்கத்தில் என்னை செல்போனில் அழைக்குமாறு கூறி தவறாகப் பேசத் தொடங்கினார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

'பிற மாணவிகளுக்கும் தொந்தரவு'

மேலும், 'இவ்வாறு பேசுவது தனக்குப் பிடிக்கவில்லை' எனக் கூறியும் தன்னிடம் பேசுமாறு மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் தொடர்பு எண் மற்றும் சமூக வலைதளங்களில் அவரை பிளாக் செய்த பிறகும் தனது நண்பர்களுக்கு போன் செய்து என்னை பேசுமாறு மிரட்டியதாக, காவல்துறையில் அளித்துள்ள புகார் மனுவில் மாணவி கூறியுள்ளார்.

தன்னைப் போல தனது துறையில் பிற மாணவிகளுக்கும் இதேபோன்று நடப்பதாகப் புகாரில் கூறியுள்ள மாணவி, 'இதைப் பற்றி கல்லூரி நிர்வாகத்துக்கும் கல்லூரியில் பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழுவிடம் (POSH) பிற மாணவிகள் புகார் செய்துள்ளனர்' எனத் தெரிவித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பெண்கள் மீதான துன்புறுத்தல் உள்பட இரண்டு பிரிவுகளில் பேராசிரியர் ஞானவேல் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

'நடவடிக்கை எடுக்க தாமதம்'

மாணவி அளித்துள்ள புகார் விவரங்கள் வெள்ளிக்கிழமையன்று ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நுழைவுவாயில் முன்பாக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

பேராசிரியர் ஞானவேல் பாபு மீது ஏற்கெனவே மாணவிகள் புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் தாமதம் செய்ததாகவும் இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் குற்றம் சுமத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "பேராசிரியர் மீது பல்கலைக்கழகத்தில் இயங்கும் புகார் குழுவிடம் மனு அளித்தபோதும் முறையான விசாரணை நடத்தவில்லை. அதற்குப் பதிலாக ஆதாரம் இல்லாத விஷயங்களைக் காரணம் காட்டி நடவடிக்கை எடுப்பதைத் தாமதம் செய்தனர்" எனக் கூறினார்.

பேராசிரியர் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவல்துறையிடம் மாணவி கொடுத்துள்ளதாகக் கூறிய மாணவர் சங்க நிர்வாகி ஒருவர், "பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் துறையில் உள்ள அனைத்து மாணவிகளிடம் சுதந்திரமான முறையில் வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும்" என்கிறார்.

"பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு பாலியல் புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வித்துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர் ஒருவர் பேசும்போது, "கல்லூரி நிர்வாகத்திலும் காவல்துறையிலும் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் அளித்துள்ளார். முதற்கட்டமாக பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்ய உள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது" எனக் கூறினார்.

பேராசிரியர் ஞானவேல் பாபுவை பல்கலைக்கழக நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளதை ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பல்கலைக்கழக பதிவாளர் குமரேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, 2024 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அடையாறில் உணவகம் நடத்தி வந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் அரசியல்ரீதியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தற்போது சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபு மீதான மாணவி ஒருவர் அளித்துள்ள பாலியல் புகார் பேசுபொருளாக மாறியுள்ளது.

'பாரபட்சமற்ற நடவடிக்கை'

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்ட அறிக்கையில், மாணவியின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கடந்த மூன்று ஆண்டுகளாக பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக மாணவி அளித்திருக்கும் புகார், அங்கு படிக்கும் ஒட்டுமொத்த மாணவிகளின் பாதுகாப்பை மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளதாகக் கூறியுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இந்தப் பாலியல் குற்றச்சாட்டு அமைந்திருப்பதாகவும் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

'மாணவியின் புகாரின்பேரில் விரிவான விசாரணை நடத்தி குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் பாரபட்சமற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும்' என அவர் கூறியுள்ளார்.

பல்கலைக்கழக வாயிலில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், போராட்டத்தின் விளைவாகவே பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை இரவு பேராசிரியர் ஞானவேல் பாபுவை காவல்துறை கைது செய்துள்ளது. இதுதொடர்பாக, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமரேசனிடம் பேசுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. ஆனால், அவர் விளக்கம் அளிப்பதற்கு முன்வரவில்லை.

கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் விளக்கம் பெறும் முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை

BBC உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - ப கிர இங்கே கிளிக் செய்யவும்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.