திமுக : ஆளுமை செலுத்திய மண்டல பொறுப்பாளர்கள்; உதயநிதியின் ஆதிக்கம் - 'அப்ருவல்' கொடுத்த முதல்வர்!
Vikatan March 29, 2026 06:48 PM

மூன்று அமைச்சர்கள் உட்பட பல சிட்டிங் எம்.எல்.ஏ-க்களை கழற்றிவிட்டு, தி.மு.க வின் வேட்பாளர்கள் அறுபது முகங்களை களத்தில் இறக்கியுள்ளது தலைமை. மண்டல பொறுப்பாளர்களின் ஆதிக்கம், கடைசி நேரத்தில் லிஸ்டில் மாற்றம் செய்த உதயநிதி என பல களேபரங்கள் இந்த பட்டியலில் பங்கெடுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 164 இடங்களில் தி.மு.க நேரடியாக களத்தில் நிற்கிறது. இந்த 164 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் பட்டியலை நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த பட்டியலில், மூன்று அமைச்சர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் சிட்டிங் எம்.எல்.ஏக்கள் பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தி.மு.க வட்டாரத்தில் நாம் விசாரித்தோம்.

சேகர் பாபு

“சென்னையில் அமைச்சர் சேகர் பாபு தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக எழும்பூர் தொகுதியில் பரந்தாமனை களத்திற்கு வராவிடாமல் அந்த இடத்தை தமிழன் பிரசன்னாவிற்கு பெற்றுக்கொடுத்துள்ளார். தாயகம் கவிக்கு பதிலாக, ரவிசந்திரனையும், ராயபுரம் மூர்த்தியையும் சேகர்பாபுவின் அழுத்ததினால் மாற்றியுள்ளார் முதல்வர். மற்றொருபுறம் வேட்பாளர்கள் பட்டியலில் கடைசி நேரத்தில் களம் இறங்கிய உதயநிதி ஸ்டாலின் தனது ஆதரவாளர் சிற்றரசுக்கு அண்ணாநகர் தொகுதியை வாங்கிக்கொடுத்துள்ளார்.

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய விருகம்பாக்கம் தொகுதியில் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜாவுக்கு மீண்டும் சீட் கிடைக்க காரணம் உதயநிதியே. அண்ணாநகர் தொகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வேலை செய்து வந்த அண்ணாநகர் கார்த்திக்கை வில்லிவாக்கம் தொகுதிக்கு மாற்றியிருக்கிறார். இப்படி சென்னையில் உதயநிதியின் ஆதிக்கமும் சத்தமில்லாமல் நடந்துள்ளது. தி.நகர் தொகுதியில் ராஜா அன்பழகன் களம் இறக்கப்பட்டதும் உதயநிதியின் தயவில் தான்.

மற்றொருபுறம், வடக்கு மண்டலத்தில் அமைச்சர் வேலுவின் ஆதரவாளர்களுக்கு மீண்டும் சீட்டை வாங்கி கொடுத்துள்ளார். குறிப்பாக ரிஷிவந்தியம் தொகுதியை தே.மு.தி.க விடாபிடியாக கேட்டும் தி.மு.க கொடுக்க மறுத்துவிட்டது. அதற்கு காரணம் வேலு தனது ஆதரவாளரான வசந்தம் கார்த்திகேயனுக்கு ரிஷிவந்தியம் தொகுதியை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்கிற உறுதியில் இருந்தது தான். அதே போல், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன்,ஓசூர் சிட்டிங் எம்.எல்.ஏ பிரகாஷ் ஆகியோர் லிஸ்டில் இடம்பெறாமல் போனதற்கு அமைச்சர்கள் சக்கரபாணி, வேலு ஆகியோர் தலையீடே பிரதான காரணம்.

இவர்களுக்கு பதிலாக தங்களது ஆதரவாளர்களை களத்தில் இறக்கிவிட்டுள்ளார்கள். அமைச்சர் காந்தி உடல்நிலையை காரணம் காட்டி, தேர்தலில் போட்டியிட முடியாது என ஏற்கனவே முதல்வரிடம் சொல்லியிருக்கிறார். அதனால், அவரது மகன் வினோத்திற்கு சீட்டை உறுதி செய்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இது ஒருபுறம் என்றால் டெல்டா மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் கே.என்.நேரு சத்தமில்லாமல் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் தனது குடைச்சலாக இருந்த லால்குடி சௌந்திர ராஜன், ஸ்ரீரங்கம் பழனியாண்டி, உள்ளிட்ட நான்கு பேரின் தொகுதிகளை கச்சிதமாக மாற்றியிருக்கிறார்.

கே.என்.நேரு

குறிப்பாக லால்குடி சௌந்திரராஜன் நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். ஆனால் அவரின் செயல்பாடுகள் சமீபத்தில் முதல்வருக்கே டென்சனை ஏற்படுத்தியிருக்கிறது.

அதே போல் ஸ்ரீரங்கம் பழனியாண்டி பத்திரிக்கையாளர் விவகாரத்தில் சிக்கி பேரை கெடுத்துக்கொண்டார். அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க கூடாது என முதல்வரே முடிவெடுத்துள்ளார்.இப்படி இருவரின் பெயரும் எம்.எல்.ஏக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இனிகோ இருதயராஜ் நேருவுடன் மல்லுக்கட்டி வந்தவர், கடைசியில் நேருவுடன் சமாதானம் செய்த பிறகே பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

நேரு பொறுப்பாளராக உள்ள டெல்டா மண்டலத்தில் தனது ஆதரவாளர்களை தவிற வேறு யாரும் உள்ளே வராதபடி தனது ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளார்.

மற்றொருபுறம் அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகிய இருவருக்கும் வாய்ப்ப மறுக்கப்பட்டுள்ளது.கனிமவள விவகாரத்தில் சிக்கியதால், மனோதங்கராஜ்க்கு வேட்டு வைக்கப்பட்டுள்ளது. செயல்பாடுகள் சரியில்லாத காரணத்தினால், அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பதவிக்கு வேட்டாகியுள்ளது.

மற்றொருபுறம் தென் மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் தங்களது ஆதரவாளர்களுக்கு தொகுதிகளை வாங்கியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றம் வேட்பாளர் கிருத்திகாவின் கணவர் போக்சோ வழக்கில் சிக்கியிருக்கிறார். ஏற்காடு வேட்பாளர் ரேவதி யார் மூலம் சீட் வாங்கினார் என்று தெரியும்.

ஸ்டாலின்

வேலுவின் தயவு அவருக்கு பெரிதாக இருந்தது.அதே போல் கட்சியின் பொறுப்பில் இருந்து துாக்கப்பட்ட திருநெல்வேலி அப்துல் வஹாபிற்கும், நாகப்பட்டினம் நிவேதா முருகனும் சீட் வாங்கியுள்ளார். கொங்கு மண்டலத்தில் தனது கண் அசைவு இல்லாமல் யாரும் சீட் பெற முடியாத நிலையை செந்தில் பாலாஜி உருவாக்கினார்.

முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் ஒப்புதலை வாங்கி கச்சதமாக தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சீட் வாங்கியுள்ளார் இந்த மண்டல பொறுப்பாளர்கள். பென் நிறுவனம், ஐ-பேக், உளவுத்துறை என ஆளுக்கு ஒரு லிஸட்டை கொடுத்த போதும், கடைசி நேரத்தில் கட்சிகாரர்களின் கரமே, தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் ஓங்கியிருக்கிறது.

'மாற்றுக் கட்சி சீனியர்கள்..' ஸ்டாலின், உதயநிதிக்கு எதிராக விஜய் டிக் அடித்திருக்கும் அந்த இருவர்!
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.