ரூ.1000க்கும் மேல் UPI பரிவர்த்தனைக்குக் கட்டணமா? - RBI விளக்கம்!
Dinamaalai March 30, 2026 11:48 AM

கடந்த சில நாட்களாக ரூ.1,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது குறித்து மத்திய அரசு மற்றும் வங்கி நிர்வாகங்கள் விளக்கம் அளித்துள்ளது. 

சாதாரண மக்கள் ஒருவருக்கொருவர் பணம் அனுப்புவதற்கோ அல்லது சிறிய கடைகளில் க்யூ.ஆர் கோடு மூலம் பணம் செலுத்துவதற்கோ எந்தக் கட்டணமும் விதிக்கப்படவில்லை. ரூ.1,000 அல்லது அதற்கு மேலான எந்தத் தொகைக்கும் பயனர் தரப்பில் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என NPCI உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தவறான புரிதலுக்குக் காரணம் 'Interchange Fee' ஆகும். இது டிஜிட்டல் வாலட்கள் மூலம் பெரிய வணிகர்களுக்கு ரூ.2,000-க்கு மேல் செலுத்தப்படும் போது வணிகர்கள்மட்டுமே செலுத்த வேண்டிய கட்டணமாகும். இது வாடிக்கையாளர்களை எந்த வகையிலும் பாதிக்காது.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, "UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் விதிக்கும் எந்த ஒரு ஆலோசனையும் தற்போது அரசிடம் இல்லை. டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பொதுமக்களிடையே ஊக்குவிப்பதே அரசின் முதன்மை நோக்கம்" என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றி வரும் வாட்ஸ்அப் தகவல்களை நம்ப வேண்டாம். உங்கள் வங்கி கணக்கில் இருந்து இது போன்ற கூடுதல் கட்டணங்கள் ஏதேனும் கழிக்கப்பட்டால், உடனடியாக வங்கியை அணுகலாம். டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், சிறிய மற்றும் நடுத்தரப் பரிவர்த்தனைகளைத் தொடர்ந்து இலவசமாக வழங்கவே அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.