பாராசிட்டமால் முதல் ஆன்டிபயாட்டிக் வரை... 900 அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வு!
Dinamaalai March 30, 2026 11:48 AM

தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் 900-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வரும் ஏப்ரல் 1 முதல் அதிகரிக்க உள்ளது.

மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம், ஒவ்வொரு ஆண்டும் மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் மருந்துகளின் விலையை மாற்றியமைக்கும். 2024-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2025-ஆம் ஆண்டிற்கான மொத்த விலைக் குறியீட்டில் ஏற்பட்டுள்ள 0.64956 சதவீத மாற்றத்தின் அடிப்படையில், இந்த ஆண்டு மருந்துகளின் விலை சுமார் 0.65% வரை உயர்த்தப்படுகிறது.

இந்த விலை உயர்வுக்கும் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கும் தொடர்பில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களின் விலை அதிகரிப்பே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த விலை உயர்வு அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலில் உள்ள சுமார் 900 மருந்து வகைகளுக்குப் பொருந்தும். இதில் அடங்குபவை. காய்ச்சல் மற்றும் வலிக்குத் தரப்படும் பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள்.

தொற்று நோய்களுக்கான நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கான வழக்கமான மருந்துகள். பல்வேறு வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுக்கான சிகிச்சைகள்.

கடந்த 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் மருந்துகளின் விலை 10% முதல் 12% வரை கணிசமாக உயர்ந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ள 0.65% உயர்வு என்பது மிகக் குறைவானது என்று மருந்துத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது நோயாளிகளின் மாதந்திர மருந்துச் செலவில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், ஒட்டுமொத்த மருத்துவச் செலவைச் சற்று உயர்த்தும்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.