முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை அதிமுகவை பார்த்து காப்பி அடித்துள்ளார்கள் - இபிஎஸ் விமர்சனம்..!
Top Tamil News March 30, 2026 11:48 AM

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி டவுன் வாகையடி சந்திப்பு பகுதியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "திமுக, ஒரு கார்ப்பரேட் கம்பெனி. குடும்பத்தில் இருப்பவர்கள்தான் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியும். ஆனால், அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட கட்சிக்கு பொதுச் செயலாளராக ஆக முடியும். அதிமுகவில் விசுவாசமாக உழைத்தால் கண்டிப்பாக உயர்ந்த பதவி கிடைக்கும் அதற்கு நானே உதாரணம். 

 "முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட தேர்தல் அறிக்கை, அதிமுகவை பார்த்து காப்பி அடித்துள்ளார்கள். மக்கள் ஒருமுறை ஏமாந்து விட்டார்கள் மறுமுறையும் ஏமாந்து விடமாட்டார்கள்.. 2021-ல் 525 வாக்குறுதிகள் தந்தார்கள். நான்கில் ஒரு பங்கை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை. டீசல், பெட்ரோல் விலை குறைப்பு செய்தார்களா? சென்னை நகரில் கழிப்பறைகளை பராமரிப்பதிலும் ஊழல். இதுபோன்ற ஒரு மோசமான ஆட்சி இந்தியாவில் எங்கும் பார்த்ததில்லை. 

அதிமுக ஆட்சி வந்த உடன் கனிமவள கொள்ளை மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்துவிட்டது. கஞ்சா தாரளமாக கிடைக்கிறது. அதிமுக ஆட்சி வந்தவுடன் மூன்றே மாதத்தில் போதை நடமாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும். போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றப்படும்.

திமுக ஆட்சியில் மின் கட்டணம் 67% உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு மீண்டும் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். நகரப் பேருந்துகளில் பெண்களைப் போல் ஆண்களும் கட்டணமில்லா பயணம் கொண்டுவரப்படும் என்றார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.