திண்டுக்கல் சீனிவாசனுக்கு திமுக போடும் ஸ்கெட்ச் - அமைச்சர் மகன் களத்தில் இறக்கிவிடப்பட்ட பின்னணி!
Vikatan March 30, 2026 07:48 PM

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் பெரியசாமியின் மகனும் எம்.எல்.ஏ-வுமான ஐ.பி.செந்தில்குமார் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். தற்போது திண்டுக்கல் தொகுதியில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அவருக்கு எதிராகப் போட்டியிடுவதற்காகவே பழனி தொகுதியிலிருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றியதாகக் கூறப்படுகிறது.

பழனி டு திண்டுக்கல் காரணம் என்ன?

பழனி தொகுதியில் இரண்டு முறை தொடர் வெற்றி பெற்ற ஐ.பி.செந்தில்குமார், மூன்றாவது முறையாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார் என்ற நிலைமை இருந்தாலும், அவரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

இது குறித்து நம்மிடையே பேசிய திமுக நிர்வாகிகள், “திமுக-வை பொறுத்தவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மையமான தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டுமென தலைமை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி திண்டுக்கல் தொகுதியில் அசைக்க முடியாத நபராக இருக்கிறார் அதிமுக-வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

அவரை வெற்றி பெற்றாலே திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக-வின் ஆதிக்கம் குறைந்துவிடும். அதோடு பழனி தொகுதியை தனிமாவட்டமாக்கி ஐ.பி.செந்தில்குமார் இடையூராக இருப்பார் என்பதால், அமைச்சர் சக்கரபாணியும் தலைமையிடம் பேசி செந்தில்குமாரை மாற்றச் சொல்லி அழுத்தம் கொடுத்தார்.

ஐ.பெரியசாமி

செந்தில்குமாரின் அப்பாவும் அமைச்சருமான ஐ.பெரியசாமியும் திண்டுக்கல் தொகுதியில் பிரசாரம் செய்தால் திண்டுக்கல் சீனிவாசனை தோற்கடித்து விடலாம் என்ற கணக்கு போட்டுதான் ஐ.பி.செந்தில்குமாரை திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றியிருக்கிறார்கள். இந்த தேர்தல் செந்தில்குமாரின் வாழ்க்கையில் ஒரு திருப்பமாக இருக்கும். அதே சமயம் திண்டுக்கல் சீனிவாசன் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய பரீட்சை இந்த தேர்தல்" என்றனர்.   

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.