வந்தியத்தேவனைப் போல மகாபலிபுரத்தில் இருந்து தான் நானும், என் கணவர் மற்றும் தோழியுடன் அதிகாலையில் என் பயணத்தை தொடங்கினேன். என்ன, என்னிடம் ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு எழுதிய ஓலை இல்லை அவ்வளவு தான்.
சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் அல்லது தில்லைக் கூத்தன் கோயில்.
இது பொன்னியின் செல்வனில் குறிப்பிடப்படவில்லை. எனினும் ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்பதாக இருந்த ஊர். சோழர்கள் கட்டிய கோயில். பிற்காலத்தில் பல்லவர்களும் விஜய நகர அரசுகளால் புனரமைக்கப்பட்டது.
முதலாம் ஆதித்த கரிகால சோழனின் மகன் முதல் பராந்தகன் பொன் கூரை வேய்ந்தான் என்று திருவாலங்காட்டு செப்பேடுகள் கூறுகின்றன.
தில்லை கூத்தன்
சிதம்பரத்தை அடைந்தோம்.
தில்லை கூத்தனின் ஆலயத்தில் மூலவருக்கு முன்னிருக்கும் பஞ்சாட்சரப்படியில் தான் சோழ மன்னர்கள் பட்டாபிஷேகம் நடை பெறும். மன்னனாக இருந்தாலும் மறையோனுக்கு கீழ் தானே.
இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சோழ சாம்ராஜயமானது, இன்றைய தென்னிந்தியா, மால்தீவ்ஸ், ஸ்ரீ லங்கா, சிங்கப்பூர், இந்தோனேசியா தாய்லாந்த் கம்போடியா மலேசியா பங்களாதேஷ் மியான்மர் மற்றும் வியெட்னாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இவ்வளவு பரந்துப்பட்ட சாம்ராஜ்யத்தின் மன்னர்கள் தான் இந்த பஞ்சாட்சர படியில் அமர்ந்து முடி சூட்டிக் கொண்டார்கள்.
வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது. இன்றைய மாநில முதலமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள எத்தகைய ஆடம்பர விழாக்கள் எடுக்கிறார்கள் என்பதை. ஆனால் சோழ மன்னர்களின் எளிமையையும் பக்தியும் நாம் இங்கே எண்ணிப் பார்த்திடல் வேண்டும்.
சிதம்பரம் கோயிலில் கோவிந்தராஜப் பெருமாள். தில்லையம்பலத்தானின் கோயிலில் நடராஜனின் அருகிலேயே குடிக் கொண்டிருக்கும் பெருமாள். ஒரே கோவிலில் சைவமும் வைஷ்ணவமும்.! என்னவொரு மத நல்லிணக்கம். தமிழர்களின் சகிப்புத்தன்மை போற்றுதலுக்குரியது.
பிற்கால சோழர்கள் காலத்தில் சைவமும் வைஷனவமும் ஏழாம் பொருத்தமாக இருந்ததை பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தால் விளக்கியிருப்பார் ஆசிரியர் கல்கி. பொதுவாக சோழ மன்னர்கள் மிகப் பெரிய சைவ பக்தர்களாக இருந்த போதும் ஆங்காங்கே வைஷ்ணவ விண்ணகரங்களையும் நிர்மாணிக்கவே செய்திருக்கிறார்கள்.
தசாவதாரம் படத்தில் வரும் கோவிந்தராஜப் பெருமாள் இவர் தான். இவரைத் தான் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் ரெண்டாம் குலோத்துங்கன் அப்புறப்படுத்தியதாக செவி வழி செய்தி உள்ளது.
ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள்
அங்கேயிருந்து, பரந்துபட்ட கீழை உலகத்தை முழுவதும் தன் ஒற்றை கொற்றை கொடியின் கீழ் ஆண்ட சோழ பேரரசர்களின் வாரிசுகள் பிற்காலத்தில் ஒரு சிறு ஜமீனாக தங்களை சுருக்கிக் கொண்டு விட்ட பிச்சாவரம் ஜமீன் சென்றேன். இன்றைய தேதிக்கு அங்கே ராஜராஜனின் வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள்.
பிச்சாவரத்தை சுற்றுலா தளமாக ஆக்கியிருக்கிறார்கள். அலையாத்திக் காடுகள் கொண்ட மிகப் பெரிய நீர்நிலை அது. போட்டிங் போகலாம். நீருக்குள் மரங்கள் வளர்ந்திருக்கிறது. படகில் செல்கையில் காட்டிற்குள் போவதைப் போன்ற உணவேற்ப்பட்டது.
வீர நாராயண பெருமாள் கோயில். வீராணம். காட்டு மன்னார்குடி
அங்கேயிருந்து மீண்டும் வந்தியத்தேவனின் பாதையில், ஆழ்வார்க்கடியானின் வீர வைஷ்ணவ பக்திக்கும், வீர சைவர்களுடன் துவந்த யுத்தம் செய்ததாக பொன்னியின் செல்வனில் வரும் வீராணம் ஏரிக்கரையில் அமர்ந்திருக்கும் வீர நாராயான ஏரி எனப்படும் இந்நாளைய வீராணம் ஏரிக்கரையில் வீரநாராயண சதுர்வேதி மங்கலம் எனப்படும்.
வீரநாராயண பெருமாள் விண்ணகரம் சென்றோம். இங்கே தான் நாதமுனிகள் பிறந்தார். இவர் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சேகரித்து தொகுத்தவர். நான்கு வேததிலும் விற்பன்னர்களாக இருந்தவர்களுக்காக முதலாம் பராந்தகனால் மானியமாக கொடுக்கப்பட்ட கிராமம் இந்த சதுர்வேதிமங்கலம்.
பொன்னியின் செல்வனின் முதல் காட்சியே இங்கே இருந்து தான் ஆரம்பிக்கிறது. ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று இங்கே வந்தியத்தேவன் வந்து சேர்கிறான். பதினெட்டாம் பெருக்கு விழாவை அத்தனை விமரிசையாக வர்ணித்திருப்பார் ஆசிரியர்.
பொதுவாக சோழ அரசர்கள் ஏரி குளம் குட்டை போன்ற நீர்நிலைகளை உருவாக்கும் போது அதை பாதுகாத்திட நீர்நிலைகளின் கரையில் பெருமாள் கோவில் அமைப்பது வழக்கம். மதுராந்தகத்தில் ஏரிக் காத்த ராமர் கோவில் இருக்கிறதைப் போல. இது உபரி தகவல்.
காட்டுமன்னார்கோயிலில் உடையார்குடி ஆனந்தீச்வர் கோயிலுக்குப் போனேன். இங்கே கருவறையின் மேற்கு அதிட்டானத்தில் ஆதித்திய கரிகாலனை கொன்ற ரவிதாசன் மற்றும் அவன் சகோதரர்கள் மூவரைப் பற்றிய கல்வெட்டுக் காணக் கிடைக்கிறது.
இந்த சிவன் கோயிலில் ஒரு எருமை மாடு பலியிடுவதற்கு தலையைக் குனிந்து கொண்டிருப்பதைப் போன்ற சிலை இருக்கிறது. தட்சிணாமூர்த்தி வழக்கத்திற்கு மாறாக கால் மேல் கால் போட்டு அமர்ந்தவாக்கில் இருக்கிறார்.
அத்தியாயம் 4
கோயிலில் இருந்து நேரே, ஆதித்த கரிகாலனுக்கு எதிராக பழுவேட்டரையர்களும் சம்புவரையரும் மற்றும் ஏனைய குறுநில மன்னர்களும் சதியாலோசனை செய்த செங்கண்ணர் சம்புவரையரின் கடம்பூர் மாளிகை இருந்த கீழக்கடம்பூர் சென்றோம்.
பொன்னியின் செல்வனில் இந்த நகரத்தை அறிமுகப்படுத்தும் விதமாக ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார். வந்தியத்தேவன் தன் நண்பன் கந்தமாறனைக் காண்பதற்கு கடம்பூருக்கு வருகிறான். மிகப் பெரியதும் நீண்டதுமான விஸ்தாரணமான கோட்டை மதில் சுவர்கள் உடைய கடம்பூர் அன்றிரவு சோழ நாட்டின் மிகப் பெரிய முக்கியஸ்தர்களின் வருகைக்காக தடபுடலாக அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தது என்று.
நாங்கள் போன போது அந்த சிறு கிராமம் இப்படிப்பட்ட பெரிய கோட்டை சுவருடன் இல்லை. அங்கே தடபுடலான வரவேற்பும் இல்லை. வரவேற்பைப் பெற நான் பெரிய பழுவேட்டரையரும் இல்லை. கந்தமாறனை சந்திக்க சென்ற வந்தியத்தேவனும் இல்லையே.
அடர்ந்த வயல்வெளிக்கிடையே மரங்களடர்ந்த மண் மேடாக இருக்கிறது இந்த மாளிகை இருந்ததாக சொல்லப்பட்ட இடம். வயல்களிடையே எப்படி இத்தனை இடத்தை விட்டு வைத்தார்கள் இன்றைய காலகட்டத்தில் அங்கே வசிக்கும் மக்கள் என்ற எண்ணம் மனதிற்குள் தோன்றியது.
ஆதித்த கரிகாலர்
ஒன்று, இந்த இடம் அரசாங்க பதிவேடுகளில் யாருக்கும் சொந்தமானதாக இருந்திருக்காது. அல்லது ஆழ உழும் போது அங்கே புதைந்து கிடந்த மாளிகையின் செங்கற்கள் வேலையை செய்ய விடாமல் தடுத்திருக்கும்.
அல்லது ஒரு எழுத்தாளனாக என் கற்பனை இப்படி விரிந்தது. ஆதித்த கரிகாலனின் கொலை நடந்த அன்றிரவு அந்த மாளிகை தீப்பற்றிப் பிடித்து எரிந்ததாகவும் எப்படி என்பது புதிராக இருந்ததாகவும் ஆசிரியர் கல்கி எழுதியிருப்பார். அப்படி தீக்கிரையான மாளிகை இருந்த இடத்தில் ஆதித்த கரிகாலனின் ஆவியானது உலாவிக் கொண்டு அங்கே ராஜ்ஜியம் செய்து கொண்டிருப்பதால், மற்றவர்களை அங்கே வர விடாமல் செய்திருப்பானோ என்று தோன்றியது. செங்கண்ணர் சம்புவரையர் எதிராளிகளுடன் சேர்ந்து கொண்டு தனக்கு எதிராக சதி செய்தாரே என்று ஆதித்தனின் ஆவி கோபம் கொண்டிருக்கும்.
செங்கண்ணன் கெட்டுப் போகப் போவதினால் தான் சதியாலோசனையை இங்கே வைத்துக் கொண்டிருப்பான் என்று தான் தோன்றியது. ஏனெனில் கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா!
இந்த மாளிகையில் தான் பலருக்கு பல பாடங்களை கற்றுக் கொடுக்கக்கூடிய சம்பவங்கள் நடந்தேறியது. சோழ மகா சரித்திரம் இந்த சம்பவங்களுக்குப் முன் பின் என இரண்டாக வகுக்கப்படுகிறது. பொன்னியின் செல்வனின் மிக முக்கிய சம்பவமான ஆதித்த கரிகாலனின் மரணம் தான் கதையின் மையப்புள்ளி. பின்பு அருண்மொழித் தேவன் பட்டத்திற்கு வருவது மீதிக்கதை.
ஆதித்தனின் மரணம் நடந்தேறிய அன்று இரவு அங்கே ரவிதாசன் மட்டுமன்றி நந்தினி மணிமேகலை வந்தியத்தேவன் பெரிய பழுவேட்டரையர், சம்புவரையர் என எல்லோருமே அங்கே இருந்தார்கள்.
368 ஆண்டு பழமையான கல்வெட்டு
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை.
இந்த கொலையை செய்தது யார்?
மேலே குறிப்பிட்டதைப் போல நந்தினியா, ரவிதாசனா மணிமேகலையா பெரிய பழுவேட்டரையரா, அல்லது தனக்கே பட்டம் கட்ட வேண்டும் என்ற பேராசையில் இருந்த உத்தம சோழன் என்னும் மதுராந்தகனா அன்றி அவனைப் பெற்ற செம்பியன் மாதேவியா, குந்தவையின் தூண்டுதலினால் அருண்மொழிவர்மனா அல்லது வந்தியத்தேவனா என்று பல கேள்விகளை பல வரலாற்று ஆசிரியர்கள் முன் வைத்துள்ளனர்.
இதன் பதிலாக தான் ஆனந்தீஸ்வரர் கோயிலில் காணப்பட்ட கல்வெட்டு மட்டுமே கிடைக்கப் பெற்ற ஒரே ஒரு ஆதாரம். உடையார்குடி கல்வெட்டு மிகவும் ஆதாரபூர்வமான ஒன்று.
உடையார்குடி கல்வெட்டு, ஆனந்தீஸ்வரர் கோயில், காட்டுமன்னார்கோயில் ”பாண்டியன் தலை கொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான முன்குடுமி அந்தணர்கள் எனப்படும் கேரள அந்தணர்களும் வீரபாண்டியனுக்கு மிகவும் நெருக்கமானவர்களுமான சோமன், தம்பி ரவிதாசன் என்னும் பஞ்சவன் பிரம்மாதி ராஜனும், இவன் தம்பி பரமேஸ்வரன் பிரம்மாதிராஜனும், இவர்கள் உடன் பிறந்த மலையனூரானும் சகோதரர்கள் அவர்கள் உறவினர்கள், இவர்களுக்கு பெண் கொடுத்தவர்கள், இவர்களிடம் பெண் எடுத்தவர்கள் மட்டுமல்லாது மாமன் மற்றும் பங்காளி முறையினர் என சுமார் முன்னூறு குடும்பத்தார் அனைவரின் சொத்துக்களையும் உடமைகளையும் விற்று அவர்கள் அனைவரையும் நாடு கடத்திட உத்தரவிட்டு ராஜராஜனின் ஆட்சிக்காலத்தின் இரண்டாம் ஆண்டில் ஒரு நிருபம் அனுப்பி வைக்கப்பட்டு அது இந்த கோயில் சுவற்றில் பொறித்து வைக்கப்பட்டிருக்கிறது.
கீழக்கடம்பூர்
ருத்ரகோட்டீஸ்வரர் கோயில், கீழக்கடம்பூர்.
கீழக்கடம்பூர் என்னும் சிற்றூரில் ருத்ரகோட்டீஸ்வரர் அதாவது இந்த ஒரு சிவலிங்கமானது ஆயிரம் சிவனுக்கு சமமானதாம் என்னும் சிறு ஆலயம் சிதிலமடைந்திருக்கிறது.
ஓரளவு செப்பனிட்டு வைத்திருக்கிறார் ஒரு முதியவர். இந்த கோயில் இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஒரு சிறு தெருவில் சிறியதாக இருக்கிறது. நாங்கள் சென்றிருந்த போது கோவில் மூடியிருந்தது. கைப்பேசியில் அழைத்ததும் கோயில் அர்ச்சகர் வந்தார்.
சிவன் கையில் உடுக்கையும், காதில் தோடும் வாயில் புன்னகையுமாக மாப்பிள்ளைக் கோலத்தில் நிற்கிறார். அருகில் ஊழி நடனமாடிய சிவன் தன் காதில் இருந்து கழண்டு விழுந்த தோடை நடனத்தை நிறுத்தாமலே வலது காலால் எடுத்து அப்படியே அதை கொண்டு போய் காதில் மீண்டும் அணிந்து கொள்ளும் சிலையும் காணக் கிடைக்கிறது.
கீழக்கடம்பூர் திருக்கோயில்
ஊர்த்தாண்டவர் கீழக்கடம்பூர் இங்கு பன்னிரண்டு நூற்றாண்டின் எழுத்து வடிவில் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சிலரின் பெயர்கள் கோயிலின் அதிட்டானத்தில் உள்ளது.
மாப்பிள்ளைக் கோலத்தில் சிவபெருமான்.
எல்லா ஊரிலும் கற்சிலைகள் உண்டு. ஆனால் இந்த சிலைகள் கற்களால் ஆன போதும் தட்டிப் பார்க்கையில் செம்பொன் சிலையை தட்டியதைப் போன்ற ஓசை கேட்பது அதிசயமாகத்தான் இருக்கிறது. அந்த சிதைக்கப்பட்ட கோயிலில் உடைக்கப்பட்ட சிலைகளை எடுத்து உள்ளேயே வைத்திருக்கிறார் அந்த முதியவர். அங்கே ஒரு நிலவரை இருந்தது.
மேல் கடம்பூர் அமிர்தகடேச்வர் கோயில்.
அங்கேயிருந்து மிக அருகில் ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த மேல் கடம்பூர் அமிர்தகடேச்வர் கோயில் உள்ளது. திருக்கடையூருக்கு சமமானது இது. தேர் போல மூலவர் சன்னதி உள்ளது. இங்கே ஜேஷ்டா தேவி எனப்படும் தெய்வம் அதாவது ஸ்ரீ தேவியின் மூத்தவள் அதாவது அக்கா, சகல சம்பத்தும் கொடுக்க கூடியவளாம். மூத்தாள் தேவி, மூதேவி என திரித்து ஒரு முலையில் உட்கார வைத்து விட்டோம். உண்மையில் அவளை ஒவ்வையார் போன்ற தமிழ் புலவர்கள் பாடி வைத்திருப்பதில் இருந்து மூத்தாள் தேவி தமிழர்கள் வணங்கும் தெய்வம் என அறியலாம். முதலாம் குலோத்துங்கனின் கல்வெட்டு காணக்கிடைக்கிறது. திராவிட கட்டிடக்கலையில் கரக்கோயிலாக கட்டப்பட்டது. உத்தம சோழ சதுர்வேதி மங்கலம் என்பது புராணப்பெயர்.
இங்கே வந்தியத்தேவன் ஆழ்வர்க்கடியானைப் பிரிந்து கும்பகோணம் போகிறான். அவன் பின்னால் போவதை நிறுத்தி விட்டு நாம் இப்போது ஆழ்வார்க்கடியானை பின் தொடர்வோம். அவனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் உண்மைத் தன்மையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்வதற்காக திருப்புறம்பியம் போகிறான். நாமும் அவனோடு திருப்புறம்பியம் போவோம்.
-தொடரும்
தேர்தல்