மிகவும் கடுமையான சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்திலும் தவெக பிரச்சாரத்திற்கு காவல்துறை தடைகளை ஏற்படுத்தி வருவதாக தவெக நிர்வாகி சிடிஆர் நிர்மல்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சிடிஆர் நிர்மல்குமார், “இன்று எங்களுடைய தலைவருக்கு கொளத்தூரில் நாங்கள் வந்து பிரச்சாரத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தோம். அதில் மைக் பயன்படுத்த வேண்டும், ஸ்பீக்கர் பயன்படுத்த வேண்டும் என்ற பெர்மிஷனும் வாங்கியிருந்தோம். அது இருந்தும், கடைசி நேரம் வரை எங்களுடைய தலைவருக்கு அந்தப் பெர்மிஷன் கொடுக்கப்படவில்லை. கடைசி வரை நாங்கள் போராடினோம். எங்கள் நிர்வாகிகள் அனைவரும் மிகவும் போராடி நின்று, பிரச்சினை செய்து, எல்லாம் செய்த பிறகுதான் கடைசி நேரத்தில் எங்களுக்கு அந்த அனுமதி வழங்கப்பட்டது.
மிகவும் கடுமையான சூழ்நிலையில், ஒவ்வொரு இடத்திலும் எங்களுடைய பிரச்சாரத்திற்கு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இங்குள்ள காவல்துறை, திமுகவுடன் இணைந்து கொண்டு, திமுகவிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு, திமுகவின் கைக்கூலியாகச் செயல்படும் பெரும்பாலான அதிகாரிகள் இதைச் செய்து வருகின்றனர். இதற்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். இன்று தலைமைத் தேர்தல் ஆணையம், டெல்லிக்கும், தமிழகத்தில் உள்ள தேர்தல் ஆணையருக்கும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் கடிதங்கள் அனுப்பியிருக்கிறோம். கண்டிப்பாக அவர்கள் இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் எங்களுடைய வேட்பாளர்களின் பிரச்சாரம் சுமுகமாக நடைபெற வேண்டும்” என்றார்.