தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், அவரது பெயரில் உள்ள சொத்துக்கள் மற்றும் வாகனங்கள் குறித்த சுவாரஸ்யமான விவரங்கள் வெளியாகியுள்ளன.
சினிமாவைத் தாண்டி அரசியலில் தடம் பதித்துள்ள விஜய்யிடம், சுமார் 7.52 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வாகனங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் BMW i7, Toyota Lexus, மற்றும் Toyota Vellfire போன்ற பல கோடி ரூபாய் மதிப்பிலான அதிநவீன சொகுசு கார்கள் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், அவரிடம் மிகவும் எளிமையான Maruti Swift காரும், வெறும் 67,400 ரூபாய் மதிப்பிலான டிவிஎஸ் எக்ஸ்எல் சூப்பர் (TVS XL Super) இருசக்கர வாகனமும் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
வாகனங்கள் மட்டுமல்லாது, விஜய்யின் மொத்த சொத்து மதிப்பும் சுமார் 200 கோடி ரூபாயைத் தாண்டும் என்று வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரிடம் ஒரு கிலோவிற்கும் அதிகமான தங்கம் மற்றும் 6 கிலோ வெள்ளிப் பொருட்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் உற்று நோக்கப்படும் வேளையில், அவரது இந்த அதிகாரப்பூர்வ சொத்து மற்றும் வாகன விவரங்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கோடிஸ்வரராக இருந்தாலும், எளிமையான வாகனங்களையும் வைத்திருக்கும் விஜய்யின் பன்முகத்தன்மை அவரது தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.