“காப்பி அடித்தோமா? வீட்டு வேலை செய்யும் பெண்களுக்குதான் வலி தெரியும்”- கனிமொழி
Top Tamil News March 31, 2026 01:48 AM

அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன் அறிவிப்பும் கவர்ச்சிகரமாக வாக்கு அறுவடையை மையப்படுத்தியதாக உள்ளன. "ரூ.8,000 மதிப்பிலான கூப்பனை பயன்படுத்தி வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் ஓவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை, வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் புதிதாக வாங்கிக்கொள்ளவோ அல்லது பழையவற்றை மாற்றிக்கொள்ளவோ வழங்கப்படும்" என்பது தி.மு.க.வின் வாக்குறுதி. இது ஒருபுறம் இருக்க அதிமுக ரூ.10,000 வழங்கப்படும் என அறிவித்ததை காப்பி அடித்து திமுக ரூ.8,000 என அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்பி கனிமொழி, “பெண்களுக்கு எந்த பொருள் தேவையோ இந்த ரூ.8000 கூப்பன் மூலமாக வாங்கிக் கொள்ளலாம். ஒரு வாஷிங்மெஷின் வாங்கினால் கையால் துணியை துவைக்கத் தேவையில்லை. அந்த நேரம் அவர்களுக்கு மிச்சப்படுகிறது. அந்த நேரத்தில் வேறு வேலை செய்ய முடியும். நாங்கள் எல்லாருக்கும் ஒரு ஃபிரிட்ஜ் கொடுக்கலாம். ஆனால் சில பெண்கள் வீட்டில் ஃபிரிட்ஜ் வைத்திருக்கலாம். அவர்களுக்கு வேறு பொருள் தேவைப்படலாம். அதனால்தான் இந்த கூப்பன் முறை. பெண்களின் வேலைச் சுமையை குறைக்கும்பொருட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அந்த வலி தெரியும். அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.