தேர்தல்: 'தனித்தொகுதி' Vs 'பொதுத்தொகுதி' - என்ன கணக்கு... எப்படி உருவானது?!
Vikatan March 31, 2026 02:48 AM

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகளுக்கு இடையிலான நீண்ட பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகள் ஒருவழியாக முடிவுக்கு வந்து, வேட்பாளர் பட்டியல்களும் அதிரடியாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இதில் கட்சிகள் ஒரு குறிப்பிட்ட தொகுதியைக் குறிப்பிடும்போது, 'தனித்தொகுதி', 'பொதுத்தொகுதி' என்று வகைப்படுத்தப்படுவதை நாம் கவனித்திருப்போம்.

உண்மையில் 'தனித்தொகுதி' என்றால் என்ன? அது 'பொதுத்தொகுதியிலிருந்து' எப்படி வேறுபடுகிறது?

தனித்தொகுதி

சட்டமன்ற, பாராளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்போது பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மக்கள் மட்டும் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்படும் தொகுதிதான் தனித்தொகுதி.

இத்தொகுதிகளில் இந்த வகுப்பினரைச் சார்ந்தவர்கள் மட்டுமே போட்டியிட முடியும், மற்றவர்கள் போட்டியிட முடியாது. ஆனால் அனைத்து தரப்பினரும் வாக்களிக்க முடியும்.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இம்முறை கொண்டு வரப்பட்டது.

இதில் 44 இடங்கள் பட்டியலினத்தவருக்கும், 2 இடங்கள் பழங்குடியினத்தவருக்கும் கொடுக்கப்படுகிறது.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் எப்படி 46 இடங்களோ அதேபோல பாராளுமன்றத்தேர்தலில் 7 இடங்கள் தனித்தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பொதுத்தொகுதி

சாதி, மதப் பாகுபாடின்றி தகுதியுள்ள இந்தியக் குடிமக்கள் யார் வேண்டுமானாலும் வேட்பாளராகப் போட்டியிடக்கூடிய தொகுதிதான் பொதுத்தொகுதி.

இங்கு வாக்காளர்களும் வேட்பாளர்களும் அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கியவர்களாக இருப்பார்கள்.

தனித்தொகுதி எப்படி உருவானது?

சுதந்திரத்துக்கு முன், ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் இந்தியர்களும் பங்கேற்கலாம் என்ற வாய்ப்பை 1919 ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசு தந்தது.

அந்தக் காலகட்டத்தில் சொத்து இருப்பவர்களுக்கு மட்டுமே வாக்குரிமையைத் தந்தார்கள்.

அதன் பிறகு பாதிக்கப்பட்ட பட்டியல் இனத்தவருக்கு, 'வகுப்புவாரி பிரதிநிதித்துவம்' வழங்கப்பட வேண்டும் என்ற அம்பேத்கர் போராட்டம் நடத்தினார்.

அதன்படி 1932 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கரின் போராட்டம் காரணமாக வகுப்புவாத பிரதிநிதிதுவத்திற்கான ஆணை பிறபிக்கப்பட்டது.

1952 ஆம் ஆண்டு தான் சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலிலும், 1957ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் இரட்டை உறுப்பினர்கள் முறை இருந்தது.

அதாவது குறிப்பிட்ட தொகுதிகளில் இரண்டு எம்.எல். ஏக்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதில் ஒருவர் பொதுப்பிரிவை சேர்ந்தவர். இன்னொருவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்.

பிறகு 1962 ஆம் ஆண்டு இந்த இரட்டை உறுப்பினர்கள் என்ற முறை மாறி குறிப்பிட்ட தொகுதிகள் பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது.

பட்டியலினத்தவருக்கு 44, பழங்குடியினருக்கு 2

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையை கணக்கில் எடுத்து இந்தத் தனித்தொகுதியை வரையறை செய்திருக்கிறார்கள்.

பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய இடங்களை சுழற்சி முறையாக அறிவிக்கிறார்கள்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இந்த சுழற்சி முறை மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில்தான் தமிழகத்திற்கு இந்திய அரசாங்கம் 44 இடங்களை பட்டியலினத்தவருக்கும் 2 இடங்களை பழங்குடியினத்தவருக்கும் ஒதுக்கி இருக்கிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.