அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும்; எடப்பாடி பழனிசாமி உறுதி..!
Seithipunal Tamil March 31, 2026 05:48 AM

தென்காசி மாவட்டம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு கேட்டு கடையநல்லூரில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் அங்கு பேசுகையில் கூறியதாவது; தென்காசி மாவட்டத்தில் உள்ள 05 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து, இந்த மாவட்டம் அதிமுக கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதிமுக ஆட்சி வந்தவுடன் தென்காசியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கினோம். இதனால் இந்த பகுதி மக்களுக்கு எளிமையான நிர்வாக வசதி கிடைக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக தேர்தல் அறிக்கையை அப்படியே திமுக காப்பி அடித்துள்ளது என்றும், 08 ஆயிரம் ரூபாய்க்கு பொருட்கள் வாங்க கூப்பன் கொடுப்பதாக திமுக கூறியுள்ளது. ஊழல் செய்வதற்காக இந்த திட்டத்தை அறிவித்துள்ளனர் என்று விமர்சித்துள்ளார். அத்துடன், நாங்கள் உங்கள் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.10 ஆயிரம் செலுத்துவோம். எல்லா குடும்பத்துக்கும் ஃபிரிட்ஜ் வழங்குவோம். குடும்பத்தலைவிகளுக்கு ரூ.02 ஆயிரம் வழங்குவோம்.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு 05 லட்சம் இருசக்கர வாகனம் ரூ.25 ஆயிரம் மானியத்துடன் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 03 காஸ் சிலிண்டர் மானியமாக வழங்கப்படும். ஆண்களும் நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொய் சொல்லி வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுகவுக்கு இந்த தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், இப்போதும் விவசாய பணியில் ஈடுபட்டுள்ள விவசாயியான எனக்கு விவசாயிகளின் கஷ்டங்கள் தெரியும்என்றும், விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை அறிவித்துள்ளோம். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் இடேயேதான் போட்டி என்று ஸ்டாலின் கூறுகிறார். தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறதா..? டெல்லியில் நடக்கிறதா...? பொம்மை முதல்வராக ஸ்டாலின் உள்ளார். அவருக்கு சுயமாக சிந்திக்கும் திறனில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன், எங்களுக்கு எதிரி திமுகதான் என்றும், மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவோம் எனவும், இந்த தேர்தல் திமுகவுக்கு இறுதி தேர்தல். திமுக என்றால் கருணாநிதி குடும்பம் மட்டுமே. இந்த குடும்ப ஆட்சி நாட்டுக்கு தேவையா..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும், இந்த முறை திமுகவுக்கு மக்கள் நிச்சயமாக தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் எனவும், தேசிய ஜனநாயக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்றும், அதிமுக தனிப்பொரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக, தென்காசி மாவட்டத்தில் கனிமவள கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. சிறுமிகள், பெண்களுக்கு மட்டுமின்றி பாட்டிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூன்றே மாதத்தில் போதைப் பொருட்கள் ஒழிக்கப்படும் என்றும், போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகம் மாற்றப்படும். போதைப் பொருட்கள் விற்பனையில் தொடர்புடையவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்து மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் இடம்பெற்றது. அப்போது பாஜக மதவாத கட்சியாக அவர்களுக்கு தெரியவில்லை. நாங்கள் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினரின் வாக்குகளை பெறுவதற்காக மதவாத கட்சி என்று கூறி தவறான பிரச்சாரம் செய்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுபான்மையினரை கண்களை இமை காப்பதுபோல் பாதுகாத்தது அதிமுக அரசு. சிறுபான்மையின மக்களுக்கு ஏராளமான திட்டங்களை அதிமுக நிறைவேற்றியது. அப்துல் கலாமுக்கு வாக்களித்து குடியரசுத் தலைவராக்கியது அதிமுக. ஆனால் ,அப்துல் கலாமுக்கு எதிராக வாக்களித்தது திமுக என்பதையும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

மேலும், இரட்டைகுளம்- ஊத்துமலை கால்வாய் அமைக்கும் திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தொடங்கப்படும் என்றும், வீராணம்- தெற்கு காவலாக்குறிச்சி கால்வாய் திட்டம் தொடங்கப்படும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.