மேற்கு வங்கத்தின் பிரபல நடிகரான ராகுல் அருணோதய் பானர்ஜி, கடற்கரையில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது, அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் பெங்காலி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ராகுல் அருணோதய் பானர்ஜி. 43 வயதான ராகுல் கடந்த 2010-ஆம் ஆண்டு தனது சக நடிகையான பிரியங்கா சர்க்காரை மணந்தார். இந்த தம்பதிக்கு 13 வயதில் மகன் உள்ளார்.
இவர் கடந்த 2008-இல் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'சிரோதினி துமி ஜே அமர்' படத்தில் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் டி.வி. தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது புதிதாக "போலே பாபா பர் கரேகா" என்ற டிவி தொடரில் நடித்து வந்துள்ளார்.
அதன் படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள தல்சாரி கடற்கரையில் நடந்தது. அப்போது முழங்கால் அளவு தண்ணீரில் தேனிலவு காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ராகுலுடன் நடித்த நடிகை ஸ்வேதா கடல் அலையால் சற்று பயந்து விட, ஸ்வேதா தண்ணீரில் இருந்து வெளியில் வர முடிவு செய்தார். இதனால் சிறிது நேரம் இடைவேளை விடப்பட்டது.
அப்போது, ராகுல் அடுத்த ஷாட் எப்படி எடுக்க வேண்டும் என்பது குறித்து கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருந்ததால் படப்பிடிப்புக் குழுவினர் அவரை தண்ணீரில் இருந்து வெளியில் வந்துவிடுமாறு வலியுறுத்தினர். அதற்குள் மிகப்பெரிய அலை ஒன்று வந்து ராகுலை இழுத்துக் கொண்டு கடலுக்குள் சென்று விட்டது. இதனை சற்றும் எதிர்பாராத அதிர்ந்து போன படக்குழுவினர் கடலுக்குள் இறங்கி ராகுலை மீட்க முயன்றனர். அங்கிருந்த லைஃப்கார்டுகளும் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
ஒரு வழியாக சில நிமிடங்களில் அவரை மீட்ட படக்குழுவினர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியில் அவரது உடலில் லேசான அசைவு இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.