'உயிருள்ளவரை உஷா' பட பாடல்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு; ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு பதிலளிக்கும் படி நீதிமன்றம் உத்தரவு..!
Seithipunal Tamil March 31, 2026 06:48 AM

கடந்த 1983-ஆம் ஆண்டு வெளியான வெளியான படம் உயிருள்ளவரை உஷா. இந்த படத்தை டி.ராஜேந்தர், இயக்கி, தயாரித்து, நடித்து, இசையமைத்து இருந்தார். இந்த படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகவும் பிரபலமானவை. 

இந்த படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, பிரபல இயக்குனர், நடிகர் டி.ராஜேந்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இந்த படம் மறு வெளியீடு செய்யப்பட்டது.  இந்த படத்தின் பாடல்களின் பதிப்புரிமை, ஆரம்பத்தில் ஏவி.எம். நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், பல நிறுவனங்களுக்கு அது கைமாறியுள்ளது தெரிய வந்தது.

இதையடுத்து, உயிருள்ளவரை உஷா படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தகரீதியாக பயன்படுத்த, ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக்  மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக் கோரி படத்தின் தயாரிப்பாளர்கள் என்ற முறையில் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏப்ரல் 20-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக்  மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதி தள்ளி வைத்துள்ளார்.
 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.