Trump Iran War: பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான் - ”மாற்றி மாற்றி நியாயமே இல்லாமல் பேசும் ட்ரம்ப்” ஹார்மஸ்
குலசேகரன் முனிரத்தினம் March 31, 2026 09:14 AM

Trump Iran War: ஹார்மஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்காவிட்டால் ஈரான் மீது பேரழிவு தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடங்கிய கூட்டு ராணுவ நடவடிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சமரச பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்த பாகிஸ்தான் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், போர் பதற்றம் தொடர்பாக பாகிஸ்தான் முன்னெடுத்துள்ள சமரச பேச்சுவார்த்தையில் நாங்கள் பங்கொள்ளவில்லை என ஈரான் அறிவித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்த தயாராக இருப்பதாக, பாகிஸ்தான் வெளிப்படையாகவே அறிவித்து இருந்த நிலையில் இந்த மறுப்பு வெளியாகியுள்ளது. இது சர்வதேச அளவில் தன்னை ஒரு முக்கிய ராஜதந்திரியாக காட்டிக்கொள்ள முயற்சித்த பாகிஸ்தானுக்கு ஒரு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

மாற்றி மாற்றி பேசும் ட்ரம்ப்

பாகிஸ்தான் முன்னெடுத்ததாக கூறப்படும் பேச்சுவார்த்தையில் தங்களுக்கு எந்த பங்களிப்பும் இல்லை என, ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. மும்பையில் உள்ள துணைத்தூதரகம் வழியாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்கா உடன் எந்தவித நேரடி பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அதில், “அமெரிக்காவின் ராஜாந்திர நிலைப்பாடுகள் தொடர்ந்து மாற்றம் காண்கின்றன. ஆனால், எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பாகிஸ்தானின் பேச்சுவார்த்தை மன்றங்கள் அவர்களுக்கே உரித்தானவை.  போரை முடிவுக்குக் கொண்டுவர பிராந்திய அளவில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை, ஆனால் அதைத் தொடங்கியது யார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இடைத்தரகர்கள் மூலம் அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைக்கிறது. பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தையில் ஈரான் கலந்துகொள்ளவும் இல்லை. அதனை அங்கீகரிக்கவும் இல்லை” என ஈரான் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் எச்சரிக்கை

முன்னதாக, ஹார்மஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரான் மீது பேரழிவு தாக்குதல் நடத்தப்படும் என நேற்று மாலை ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்தார். தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “புதிய மற்றும் மிகவும் நியாயமான தலைமையுடன் வாஷிங்டன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது விரைவில் ஓர் உடன்பாட்டை எட்டத் தவறினால், அது பெரும் ராணுவ நடவடிக்கையைத் தூண்டி, பிராந்தியத்தில் பதட்டங்களை கணிசமாக அதிகரிக்கும். பிராந்தியத்தில் பதற்றங்களைத் தணிப்பதற்கும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் ஹார்மஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஒரு முக்கியமான படியாக இருக்கும்.

நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள் மற்றும் கார்க் தீவு போன்ற  முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும். இந்த இலக்குகள் இதுவரை வேண்டுமென்றே தாக்கப்படவில்லை” என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளைகுடா நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் பாகிஸ்தான் முன்னெடுத்த பேச்சுவார்த்தையால் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ட்ரம்பின் எச்சரிக்கை மற்றும் ஈரானின் பேச்சுவார்த்தை நிராகரிப்பு ஆகியவை இந்த பிரச்னை தற்போதைக்கு முடிவுறாது என்பதை உணர்த்துகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.