தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், கூட்டணி கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிக முக்கியமான ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய அவர், தேர்தல் பணிகளில் திமுக மாவட்டச் செயலாளர்கள் (மா.செ.,க்கள்) எந்தச் சூழலிலும் மெத்தனமாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். ஒருவேளை கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டால், சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும் என அவர் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது மாவட்டச் செயலாளர்களின் பொறுப்பு என்று குறிப்பிட்ட ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில் அவர்கள் சிறிதளவு சுணக்கம் காட்டினாலும், அதை உடனடியாகத் தலைமையிடம் தெரிவிக்குமாறு கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். “நீங்க புகார் கொடுத்தா போதும், அடுத்த நிமிஷம் ஆக்ஷன் இருக்கும்” என்று அவர் கூறியிருப்பது திமுக நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிரடி உத்தரவு, கூட்டணி கட்சிகளிடையே நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், திமுக மாவட்டச் செயலாளர்களைக் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளது.