தவெக தலைவர் விஜய் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்துமதிப்பு விபரங்கள்; அசையும் சொத்து ரூ.404 கோடி; தாய் தந்தைக்குக்கு கோடிகளில் கடன் உதவி..!
Seithipunal Tamil March 31, 2026 03:48 AM

தமிழக சட்டபேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று, மே மாதம் 04 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. 

இந்த தேர்தலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, அக்கட்சியின் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 02 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அதன்படி, வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளான இன்று பெரம்பூர் தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், விஜயின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் சொத்துக்களின் விபரம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.

அதில், விஜய் வைத்திருக்கும் அசையும் சொத்துக்களின் மதிப்பு ரூ. 404 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. சுயமாக வாங்கிய அசையா சொத்தின் கொள்முதல் விலை ரூ 92 கோடி எனவும் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், அசையா சொத்தின் தோராய நடப்பு சந்தை மதிப்பு விலை ரூ.220 கோடி ரூபாய் எனவும், மொத்தம் விஜய்யிடம் அசையும் மற்றும் அசையா சொத்தாக ரூ.624 கோடி இருப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதேபோன்று விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் சுமார் 391 சவரன் தங்க நகைகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்த தங்க நகைகளின் எடை சுமார் 3132 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.4.07 கோடியாகும். வெள்ளி பொருட்கள் 883 கிராம் எடையுடன் ரூ.1.20 கோடி மதிப்பில் உள்ளது எனவும், 01 கோடி மதிப்பிலான 135 கேரட் வைரம் சங்கீதாவின் பெயரில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும் விஜய் வைத்திருக்கும் வாகனங்கள் பொறுத்தவரை 05 சொகுசுக் கார்களும், 1 டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனமும் இருக்கிறது என வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், தனக்கு கடன்கள் எதுவும் இல்லை எனத் தெரிவித்திருக்கும் தவெக தலைவர் விஜய். என். ஆனந்த்-க்கு 03 கோடி ரூபாய், அவரது தந்தை சந்திரசேகருக்கு 03 கோடி ரூபாய், அவரது தாய் சோபாவுக்கு 87 லட்சம் ரூபாய் கடன் கொடுத்திருப்பதாகவும் வேட்பு மனுவில் விஜய் தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.