மயிலாடுதுறை: சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று முன்னாள் மாவட்ட செயலாளரும், தற்போதைய குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளருமான வி.ஜி.கே. செந்தில்நாதன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுகவில் கடந்த சில நாட்களாகவே அதிருப்தி அலை வீசி வருகிறது. நேற்று மாவட்ட அவைத்தலைவர் பி.வி. பாரதி தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது கட்சித் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சி விலகும் முன்பே, இன்று மாவட்டத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான வி.ஜி.கே. செந்தில்நாதன் செய்தியாளர்களைச் சந்தித்து தனது அதிருப்தியைப் பதிவு செய்ததோடு, ஒன்றிய செயலாளர் பதவியையும் துறந்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்திற்கு உட்பட்ட வழுவூர் கிராமத்தைச் சேர்ந்த வி.ஜி.கே. செந்தில்நாதன், ஒரு பாரம்பரிய அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை 1972-ல் அதிமுக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே கட்சியில் விசுவாசமாகப் பணியாற்றியவர். தந்தையின் வழியில், தனது 18-வது வயதில் கிளைக் கழகச் செயலாளராகப் பயணத்தைத் தொடங்கிய செந்தில்நாதன், கடந்த 35 ஆண்டுகளாகக் கட்சியின் அடிமட்டத் தொண்டனாக இருந்து பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார்.
குறிப்பாக, 2021-ஆம் ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டபோது, அதன் முதல் மாவட்ட செயலாளராகச் செந்தில்நாதன் நியமிக்கப்பட்டார். எவ்விதக் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், வெறும் ஆறு மாதங்களில் அவர் அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது அவரது ஆதரவாளர்களிடையே நீண்டகாலமாக ஆறாத வடுவாக இருந்து வந்தது.
செய்தியாளர் சந்திப்பில் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பேசிய செந்தில்நாதன், முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் தற்போதைய மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
"35 ஆண்டுகாலமாக ரத்தமும் சதையுமாக அதிமுகவிற்காக உழைத்த எனக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் மற்றும் மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ஆகிய இருவரும் இணைந்து என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களின் தன்னிச்சையான போக்கினால் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓரங்கட்டப்பட்டு விட்டனர்."
மேலும், தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு தகவலையும் அவர் பகிர்ந்தார். "முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தானும் ஒருமுறை முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற பெரும் கனவில் இருந்தார். அவரது எண்ணம் நிறைவேறாத நிலையில், தற்போது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்ற உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். இதன் காரணமாகவே டெல்டா மாவட்டங்களில் வேண்டுமென்றே தோல்வியடையக்கூடிய வேட்பாளர்களை அவர் தேர்வு செய்துள்ளார்" என்று அதிரடி புகாரை வாசித்தார்.
மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, கட்சியில் தமக்குத் தொடர்ந்து அவமரியாதை இழைக்கப்பட்டதாகக் கூறி வந்த செந்தில்நாதனுக்கு, வரும் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர் (MLA) சீட்டு வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி மீண்டும் குத்தாலம் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், மயிலாடுதுறை தொகுதி கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. இதனால் தமக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாலும், மாவட்ட நிர்வாகத்தின் அழுத்தங்களாலும் விரக்தியடைந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தைப் பொதுச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
"அதிமுகவின் ரத்தம் உடம்பில் ஓடும் என்னைப் போன்றவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்காமல் அவமரியாதை செய்வதைப் பொதுச் செயலாளருக்குத் தெரியப்படுத்தவே இந்த ராஜினாமா முடிவை எடுத்துள்ளேன். பதவியில் இல்லாவிட்டாலும், கட்சியின் அடிப்படைத் தொண்டனாக இருந்து தொடர்ந்து உழைப்பேன்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
மயிலாடுதுறை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது தேர்தல் களத்தில் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். டெல்டா மாவட்டங்களில் நிலவும் இந்த உட்கட்சிப் பூசல், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலை ஏற்படுத்தியுள்ளது.