கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு- செந்தில்பாலாஜி
Top Tamil News March 31, 2026 10:48 PM

கரூரில் நாளை முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ள உள்ளதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

கரூர் அடுத்த கோடங்கிப்பட்டியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜனை ஆதரித்து அப்பகுதி பொதுமக்களிடம் கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரித்தார். அப்போது 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பேட்டியளித்த செந்தில்பாலாஜி,  “கடந்த ஐந்து ஆண்டுகளில் கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை முதலமைச்சர் வழங்கியுள்ளார். இதில் கரூர் மாநகராட்சியில் மட்டும் ஏறத்தாழ 1,140 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்தச் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்கு சேகரிக்க உள்ளோம். ஒரு சிலர் நான் கரூரில் இல்லை என்பதால் வெற்றி பெறுவோம் என்று பேசி வருகிறார்கள். கரூர் தொகுதியில் திமுக வேட்பாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவார்.

எதிர்க்கட்சியினரிடம் சொல்வதற்குச் சாதனைகள் ஏதுமில்லை என்பதால், அவர்கள் தேர்தல் அறிக்கையை மட்டும் நம்பியிருக்கின்றனர். ஆனால், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடம் "சூப்பர் ஸ்டார்" போலச் சென்றடைந்துள்ளது. கரூரிலிருந்து கோவை (கோவை தெற்கு) தொகுதிக்கு மாற்றப்பட்டது குறித்துக் கேட்டபோது, கழகத் தலைமை மற்றும் முதலமைச்சரின் கட்டளையை ஏற்றுச் செயல்படுவதே ஒரு தொண்டனாக என் பணி. கரூரையும் கோவையையும் தனது இரு கண்களாகவும், உடல் மற்றும் உயிர் போன்றும் கருதுகிறேன். 31 வயதில் தன்னை இந்த உலகிற்கு அடையாளப்படுத்தியது கரூர் மக்கள்தான். நாளை ராயனூர் பகுதியில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள்” என தெரிவித்தார். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.