வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவாரூரில் பரப்புரையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தி திணிப்பை ஏற்கவில்லை என நம் வீட்டு குழந்தைகள் படிப்பதற்கு கூட நிதி ஒதுக்காத வஞ்சகக் கூட்டத்திடம் தமிழ்நாட்டை ஒப்படைக்க முடியுமா? தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால் திமுக ஆட்சி தொடர வேண்டும். அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டைக் காக்க, திமுகவின் கூட்டணியை மக்கள் ஆதரிக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகை, கனவு இல்லம், விடியல் பயணம் ஆகிய திராவிட மாடல் அரசின் திட்டங்களை காப்பி அடித்துவிட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை நாம் காப்பி அடித்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். வரியை உயர்த்தி அதிமுகவின் தேர்தல் அறிக்கையை செயல்படுத்துவோம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்; அவருக்கு தெரிந்தது அவ்வளவுதான்.
2021ல் எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஆட்சிப் பொறுப்பை வழங்கினீர்கள். முதல் நாளிலேயே விடியல் பயணம் என்ற திட்டத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தேன். காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், நான் முதல்வன் என எண்ணற்ற திட்டங்கள் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம்தான் திருவாரூர் தேரோட்டம் நடந்து முடிந்தது. உலகப் பெருமை கொண்ட அந்த ஆழித்தேரை ஓட வைத்த தலைவர் நம் கலைஞர். திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கி நீதிமன்றம், பேருந்து நிலையம், மருத்துவக் கல்லூரி என அனைத்து வசதிகளையும் செய்தது கலைஞர்” என்றார்.