பிரச்சாரத்திற்கு அனுமதி பெற இனி 'சுவிதா' கட்டாயம்! - தேர்தல் ஆணையம் அதிரடி..!
Top Tamil News April 01, 2026 08:48 AM

தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளும், சுயேச்சை வேட்பாளர்களும் பொதுக்கூட்டங்கள் நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும் பல்வேறு துறைகளிடம் அனுமதி பெற வேண்டியிருக்கும். இந்தச் சிரமத்தைக் குறைக்க suvidha.eci.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி வரும் தேர்தல்களில் அனைத்து விண்ணப்பங்களும் இந்த இணையதளம் வழியாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். இத்தகைய விண்ணப்பங்கள் அந்தந்தச் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரால் பெறப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் பரிசீலனை செய்யப்பட்டுத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன நிகழ்வுகளுக்கு அனுமதி பெற வேண்டும்?

வேட்பாளர்கள் மற்றும் கட்சிகள் பின்வரும் முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த இணையதளம் வாயிலாக அனுமதி பெறலாம்.

1. ஹெலிகாப்டர் மற்றும் ஹெலிபேட் (தரையிறங்கு தளம்) பயன்படுத்துவதற்கான அனுமதி.
2. தற்காலிகக் கட்சி அலுவலகம் திறத்தல்.
3. ஒலிபெருக்கியுடன் கூடிய அல்லது இல்லாத பொதுக்கூட்டங்கள் நடத்துதல்.
4. தெருமுனை கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துதல்.
5. வீதி உலா மேற்கொள்வதற்கான அனுமதி.
6. சுவர் ஒட்டிகள், விளம்பரப் பலகைகள் மற்றும் ஒற்றைத் தூண் விளம்பரப் பலகைகளைத் திரையிடுதல்.
7. தேர்தல் பிரச்சார வாகனங்களுக்கான அனுமதி.
8. மேடை அமைத்தல் மற்றும் பாதுகாப்புத் தடுப்புகள் (Barricades) அமைப்பதற்கான அனுமதி.

நிபந்தனைகள்

அனுதி கோரும் வேட்பாளர்கள், தாங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ள நிகழ்விற்கு குறைந்தபட்சம் 48 மணி நேரத்திற்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பாக, தேர்தல் செலவினக் கண்காணிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களின்படி, 'இணைப்பு-D1' படிவத்தில் தங்களது செலவினத் திட்ட விவரங்களுடன் அனுமதிப் பிரிவிற்குப் பொறுப்பான அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இது தேர்தல் செலவுகளைத் துல்லியமாகக் கணக்கிட உதவும்.

அரசியல் கட்சிகளுக்கான வேண்டுகோள்

தேர்தல் ஆணையத்தின் இந்த டிஜிட்டல் முயற்சி, தேவையற்ற அலைச்சல்களைத் தவிர்த்து, சமமான வாய்ப்பினை அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்குகிறது. அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தங்களின் விண்ணப்பங்களில் தேதி, இடம் மற்றும் நேரம் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் முழுமையாகவும் சரியாகவும் குறிப்பிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.