“அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவுபட்டு, வருத்தப்பட்டு...“; ட்ரம்ப்புக்கு மெர்சல் காட்டிய ஈரான்
ஸ்ரீராம் ஆராவமுதன் April 03, 2026 10:44 AM

அமெரிக்கா இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வரும் என்று பார்த்தால், நாளுக்கு நாள் தீவிரமடைந்துதான் வருகிறது. அமெரிக்காவும் ஈரான் மாறி மாறி மிரட்டல்களை விடுத்து வரும் நிலையல், உச்ச கட்டமாக, நேற்று அமெரிக்க மக்களுக்கு உரையாற்றிய ட்ரம்ப், ஈரானில் இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், இன்னும் 2, 3 வாரங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு, அமெரிக்கா அவமானப்பட்டு சரணடையும் வரை போர் தொடரும் என்று மிரட்டலான பதிலடியை ஈரான் கொடுத்துள்ளது.

மிரட்டல் விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

மத்திய கிழக்கில் போர் தொடங்கியதிலிருந்து, தினம் தினம் ஒரு மிரட்டலை விடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். ஆனால், அதை செயலில் காட்டுகிறாரா என்றால், அதுதான் இல்லை. கடுமையான மிரட்டல்களை விடுத்து, எப்படியாவது ஈரான் வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று அவர் முயற்சித்து வருகிறார்.

ஆனால், எதற்கும் சளைக்காத ஈரான், பதிலுக்கு ட்ரம்ப்பையே மிரள வைத்து வருகிறது. சமீபத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் ஈரானை முற்றிலும் அழித்து, கற்காலத்திற்கு கொண்டு செல்வோம் என மிரட்டியிருந்தார் ட்ரம்ப். அதற்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களை தாக்கி அழிக்கப் போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், ட்ரம்ப்புக்கு எதிராக போராடி வரும் அமெரிக்க மக்களுக்கு நேற்று அவர் உரையாற்றினார். அப்போது, ஈரானில் தங்கள் இலக்குகளை நெருங்கிவிட்டதாகவும், போரை இன்னும் வேகமாக முடிப்போம் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். மேலும், இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஈரானை மிகக் கடுமையாக தாக்கப் போவதாகவும் மிரட்டினார். அதோடு, ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க மற்ற நாடுகளுக்கு அமெரிக்கா உதவும் என்றும் கூறினார். 

அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் கடிதம்

இதனிடையே, அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் ஒரு கடிதத்தை எழுதினார். அதில், நீண்ட பாரம்பரியமான வரலாறு கொண்ட ஈரான், ஒருபோதும் தானாக எந்த போரையும் தொடங்கியதில்லை என்றும், எந்த ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளவும் முயற்சிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும், இதுவரை நடந்த போர்கள் எல்லாமே, தங்கள் நாட்டின்  தற்காப்பிற்காகவே நடந்துள்ளதாகவும் கூறிய அவர், தங்கள் நாட்டின் மீது வேண்டுமென்றே கதைகள் திரிக்கப்படுவதாகவும் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

அதோடு, படித்த ஈரானியர்கள் உலகம் முழுவதும் எந்த அளவிற்கு சேவை செய்துவருகிறர்கள் என்பதை நினைவுகூர்ந்த அவர், அதை வைத்து, தற்போது திரிக்கப்படும் கதைகளில் கூறப்படுவதுபோன்ற செயலில் ஈரான் ஈடுபடுமா என்பதை மக்கள் யோசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொடிருந்தார்.

ஈரானும் மிரட்டலான பதிலடி

இத்தகைய சூழலில், ட்ரம்ப்பின் உரைக்கு பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், ஈரானின் ராணுவத் திறனை முழுமையாக மதிப்பிடத் தவறிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், பேரழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளது.

மேலும், ஈரானை அழித்துவிட்டதாக ட்ரம்ப் கூறிய நிலையில், அமெரிக்கா அவமானப்பட்டு, இழிவடைந்து, ஒரு நிரந்தரமான வருத்தத்திற்கு ஆளாகி சரணடையும் வரை, இந்த போர் தொடரும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது ஈரான் ராணுவம்.

இதை வைத்து பார்க்கும்போது, இந்த போர் இப்போதைக்கு முடிவடையும் என்று தெரியவில்லை. இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தால், அந்தந்த நாடுகளுக்கு உதவும் விதமாக, நட்பு நாடுகள் கைகோர்க்கும் பட்சத்தில், இது ஒரு மிகப் பெரிய போராக உருவெடுத்து, உலகம் முழுவதும் கடுமையான எரிபொருள், பெட்ரோல், டீசல் தட்டுப்பாடுகளை ஏற்படுத்தி, விலைவாசி உயர்வுக்கும் வழிவகுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.