காங்கோ பயங்கரவாதிகள் தாக்குதலில் 43 பொதுமக்கள் துடிதுடிக்கப் பலி - கிராமங்களுக்குத் தீ வைப்பு!
Dinamaalai April 03, 2026 10:48 AM

உள்நாட்டுப் போரினால் நிலைகுலைந்துள்ள காங்கோ நாட்டில், பயங்கரவாத அமைப்புகள் மீண்டும் தங்களது கோர முகத்தைக் காட்டியுள்ளன. இடுரி மாகாணத்தில் உள்ள மாம்பசா பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கோவின் கிழக்குப்பகுதியில் செயல்பட்டு வரும் மக்களாட்சி கூட்டணி படைகள் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. இது ஐஎஸ் அமைப்பின் கிளை அமைப்பாகும். நேற்று முன்தினம் இரவு மாம்பசா நகருக்கு அருகிலுள்ள பஹ்வாடொ (Bafwakoa) கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்த பயங்கரவாதிகள், கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டும், அரிவாள்களால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

தாக்குதலுக்குப் பிறகு சுமார் 44 வீடுகள், வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களைப் பயங்கரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தினர். கிராமமே போர்க்களம் போலக் காட்சியளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் காங்கோ நாட்டு ராணுவம் சம்பவ இடத்திற்கு விரைந்தது. எனினும், அதற்குள் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

"பொதுமக்கள் மீதான இந்தத் தாக்குதல் அரசின் அமைதி முயற்சிகளைச் சீர்குலைக்கும் செயலாகும்" என ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜூல்ஸ் நுகோங்கோ தெரிவித்துள்ளார். தற்போது அந்தப் பகுதிகளில் ராணுவம் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாலும், சிலரைத் தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாலும் உயிரிழப்பு எண்ணிக்கை 70-ஐத் தாண்டக்கூடும் என அஞ்சப்படுகிறது.

காங்கோ மற்றும் உகாண்டா எல்லையோரப் பகுதிகளில் ஏடிஎஃப் பயங்கரவாதிகள் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். 2025 அக்டோபர் முதல் இதுவரை சுமார் 260-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இவர்களால் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை கவலை தெரிவித்துள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.