சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வந்த பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கடந்த ஒரு மாதமாக நிலவி வந்த ரயில் போக்குவரத்து மாற்றங்கள் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளன. இன்று முதல் மின்சார ரயில்கள் தங்களது வழக்கமான நடைமேடைகளில் இருந்து இயக்கப்படுகின்றன.

எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வந்ததால், ரயில்கள் 5 மற்றும் 6-வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டன. இதனால் ரயில்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டிருந்தது. இந்தப் பணிகள் ஏப்ரல் 5-ம் தேதிதான் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தெற்கு ரயில்வே நிர்ணயித்த காலத்திற்கு முன்பே பணிகளை முடித்துள்ளது. இன்று முதல் மீண்டும் 10 மற்றும் 11-வது நடைமேடைகள் வழியாக மின்சார ரயில்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 27-ம் தேதி முதல் அமலில் இருந்த தற்காலிகக் கால அட்டவணை இன்று முதல் ரத்து செய்யப்படுகிறது. பிப்ரவரி 20-ம் தேதிக்கு முன்பு இருந்த வழக்கமான கால அட்டவணை மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.

சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இரு மார்க்கங்களிலும் தலா 106 ரயில்கள் என மொத்தம் 212 சேவைகள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மொத்தம் 190 சேவைகள் (கடற்கரை மார்க்கம் 93, செங்கல்பட்டு மார்க்கம் 97) இயக்கப்படும்.
ரயில் சேவைகள் குறைக்கப்பட்டதால் கடந்த சில வாரங்களாகத் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு மார்க்கத்தில் பயணிக்கும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். தற்போது மீண்டும் 212 ரயில்கள் இயக்கப்படுவதால், அலுவலகம் மற்றும் கல்லூரி செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.