"பிரதமர் மோடி ஒரு கோழை.. அவருக்கு முதுகெலும்பு இல்லை!" - பிரியங்கா காந்தி ஆவேசம்!
Dinamaalai April 03, 2026 03:48 PM

கேரளத்தில் ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திருவனந்தபுரம் புத்தந்தோப்பு பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியது தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசப் பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரியங்கா காந்தி, "இந்தியாவுக்காக உலக அரங்கில் குரல் கொடுக்கப் பிரதமர் மோடிக்குத் தைரியம் இல்லை. அவர் ஒரு கோழை. அவருக்கு முதுகெலும்பு இல்லை. நமது நாட்டின் எரிசக்திப் பாதுகாப்பில் அவர் சமரசம் செய்து கொண்டுள்ளார்."

"சர்ச்சைக்குரிய 'எப்ஸ்டீன் கோப்புகளில்' அவரது பெயர் இடம்பெற்றுள்ளதால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் விரும்புகிறார். இதற்காக இந்தியாவுக்கான நலன்களை அவர் விட்டுக்கொடுத்து வருகிறார். இதற்கான விலையைத் தான் நாம் ஒவ்வொரு நாளும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்." மத்திய கிழக்கில் போர் நடக்கும் வேளையில், அங்குச் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்குப் பாதுகாப்பு வழங்க மோடியின் கொள்கைகள் தவறிவிட்டன எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

கேரளாவில் ஆளும் எல்.டி.எப் கூட்டணியைப் பாஜகவின் 'பி-டீம்' என அவர் விமர்சித்தார். "இடதுசாரித் தலைவர்கள் யாராவது மோடியை எதிர்த்துப் பேசுகிறார்களா? அவர்கள் மீது அமலாக்கத்துறை அல்லது சிபிஐ ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? ஏனெனில் இருவருக்கும் இடையே ரகசியப் புரிந்துணர்வு உள்ளது." "கடந்த 5 ஆண்டுகளில் கேரளாவின் சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலுமாகச் சீர்குலைந்துவிட்டது. அரசு மருத்துவமனைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மக்களின் தேவைகளை இந்த அரசு முற்றிலும் அலட்சியப்படுத்திவிட்டது."

கேரளாவின் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 9-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் எனப் பிரியங்கா காந்தி நம்பிக்கை தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.