சிபிஎஸ்இ 2026 பொதுத்தேர்வு வினாத்தாள்களில் உள்ள QR குறியீடுகள் குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற 12-ஆம் வகுப்பு வரலாறு மற்றும் கணித தேர்வு வினாத்தாள்களில் இருந்த QR குறியீடுகளை ஸ்கேன் செய்தபோது, அவை இணைய பிரபலங்கள் மற்றும் தேவையற்ற இணைய பக்கங்களுக்கு இட்டு சென்றதாக வீடியோக்கள் வைரலாகின.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, வினாத்தாள்களில் உள்ள QR குறியீடுகள் இணைய இணைப்புகளுக்காக வழங்கப்பட்டவை அல்ல என தெளிவுபடுத்தியுள்ளது. இவை வினாத்தாளின் உண்மைத்தன்மையை சரிபார்க்கவும், ரகசியத்தன்மையை பாதுகாக்கவும் பயன்படுத்தப்படும் உள்முக பாதுகாப்பு அம்சங்களாகும்.
கூகுள் தேடல் அல்காரிதம் காரணமாக சில நேரங்களில் தேவையற்ற முடிவுகள் தோன்றலாம், ஆனால் அதற்கும் வாரியத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இத்தகைய வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு கட்டுப்பாட்டு முறையை சிதைக்கும் நோக்கில் செயல்படும் இத்தகைய பிரச்சாரங்களை தவிர்க்குமாறு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
Edited by Siva