செங்கல்பட்டு திருப்போரூர் கந்தசாமி முருகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி என முழங்கினார். திருப்போரூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், நிர்வாகத் திறனற்ற திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் முன்னெடுத்த 100 நாள் நடைபயணம் திருப்போரூரில் தொடங்கியதாலேயே வெற்றி பெற்றதாகக் குறிப்பிட்டார். அதே சென்டிமென்ட் அடிப்படையில் தற்போதும் இங்கிருந்தே பிரச்சாரத்தைத் தொடங்குவதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பது உறுதி என்றும் தெரிவித்தார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய அவர், கடந்த ஐந்தாண்டுகளில் குழந்தைகளுக்கு எதிராக 62,000 குற்றங்கள் நடந்துள்ளதாகவும், அதில் 27,000 போக்சோ வழக்குகள் அடங்கும் என்றும் சுட்டிக்காட்டினார். நாளொன்றுக்கு சராசரியாக 35 குற்றங்கள் நடப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மூன்று மகள்களைப் பெற்ற தந்தை என்ற முறையில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற இந்த அரசை மக்கள் தூக்கியெறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நாட்டில் நடப்பவற்றை அறியாமல் விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதாகவும், அவரைச் சுற்றியுள்ள அமைச்சர்கள் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
பட்டியலின மக்கள் குறித்துப் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக ஆட்சியில் தலித் மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்தார். வேங்கைவயல் முதல் கள்ளக்குறிச்சி வரை பல்வேறு சம்பவங்கள் நடந்தும் திருமாவளவனுக்கு திமுக வெறும் 5 முதல் 8 இடங்களை மட்டுமே ஒதுக்குவதாகவும், அமைச்சரவையில் பட்டியலின அமைச்சர்கள் கடைசி வரிசையிலேயே அமர வைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார். கலைஞர் மறைவுடன் திமுகவில் சமூக நீதி முடிந்துவிட்டது என்றும், தான் தான் இந்தியாவிலேயே பட்டியலின மக்களுக்காக இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவன் என்றும் அவர் பெருமிதம் கொண்டார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் மீனவ சமுதாயத்திற்கு MBC பிரிவில் உள் ஒதுக்கீடு பெற்றுத் தரப்படும் என்ற வாக்குறுதியை அவர் அளித்தார். அரசு ஊழியர்களை திமுக ஏமாற்றிவிட்டதாகக் கூறிய அவர், தமிழகத்தில் எந்தப் பிரச்சனை நடந்தாலும் பாஜக மீது பழியைப் போட்டு திமுக தப்பிக்கப் பார்ப்பதாகக் குற்றம் சாட்டினார். ஆம்ஸ்ட்ராங் மற்றும் ஜெகன்மூர்த்தி போன்ற தலைவர்களின் கனவான அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசிய அவர், திமுக தலித் மக்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துவதாகச் சாடினார். கடந்த ஐந்தாண்டுகளை இழந்துவிட்ட தமிழக மக்கள், மீண்டும் திமுகவிற்கு வாய்ப்பு வழங்கி ஏமாற வேண்டாம் என அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.