அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை அதிரடியாக மூடியுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுவதால், கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கு உலக அளவில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த ஜலசந்தியை மீண்டும் திறக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஈரான் நிராகரித்து தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வர்த்தக ரீதியாக பெரும் பாதிப்புகளும் உருவாகியுள்ளன.
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக விரைவில் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்றும், அதன் மூலம் நல்ல வருவாய் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த அறிக்கை, அவர் ஈரானுடன் சமரசமாகப் போய் போரை முடிக்க விரும்புகிறாரா அல்லது ராணுவ பலத்தைப் பயன்படுத்தி ஜலசந்தியைத் திறக்கத் திட்டமிடுகிறாரா என்ற விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஒருவேளை அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால், அது ஒரு பெரிய உலகளாவிய போருக்கு வழிவகுப்பதோடு எண்ணெய் விலையை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தக்கூடும் என்பதால் உலக நாடுகள் பெரும் பதற்றத்தில் உள்ளன.