சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்... ஏப்.14ல் தேரோட்டம்!
Dinamaalai April 04, 2026 11:48 AM

தமிழகத்தின் மிக முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேர்த்திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் முறைப்படி தொடங்குகிறது. காலை கொடியேற்றமும், நாளை இரவு அம்மன் கேடயத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளுவார். இரவு 8 மணிக்கு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி தருவார்.

திருவிழாவின் பத்தாம் நாளான சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 14ம் தேதி சிகர நிகழ்ச்சியான மகா தேரோட்டம் நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அம்மன் தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

திருவிழாவையொட்டி திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்குப் பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனர். பக்தர்களின் வசதிக்காகக் குடிநீர், தற்காலிக கழிப்பறை வசதிகள் மற்றும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. சிறப்புப் பேருந்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.