தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜக தனது நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முன்னதாக, தான் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தீவிரமாகப் பணியாற்றுவேன் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.
அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது வெளியாகியுள்ள நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் அவரது பெயர் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அண்ணாமலையுடன் இணைந்து சரத்குமார், குஷ்பு மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோரும் தமிழகம் முழுவதும் தாமரை சின்னத்திற்கு ஆதரவாகப் வாக்கு சேகரிக்க உள்ளனர்.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், தேசியத் தலைவர்களின் வருகையும் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா மற்றும் அசாம் ஆகிய 6 மாநிலங்களின் பாஜக முதலமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில் வடமாநில முதலமைச்சர்களின் வருகை மற்றும் அண்ணாமலையின் அனல் பறக்கும் பிரச்சாரம், தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என அக்கட்சியினர் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் தற்போது தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.