டிரம்பின் 48 மணி நேர எச்சரிக்கை முட்டாள்தனமானது.. எங்களை தாக்கினால் பதிலடி கொடுப்போம்: ஈரான் எச்சரிக்கை..!
WEBDUNIA TAMIL April 05, 2026 12:48 PM

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த 48 மணி நேர கெடுவை ஈரான் கடுமையாக நிராகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவில்லை என்றால், ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் மீது குண்டு மழை பொழியும்" என டிரம்ப் எச்சரித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஈரான் ராணுவ ஜெனரல் அலி அப்துல்லாஹி அலியாபாடி, டிரம்பின் இந்த மிரட்டல் முட்டாள்தனமான செயல்" என்று சாடியுள்ளார்.

பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-ஈரான் போர் தற்போது ஆறாவது வாரத்தை எட்டியுள்ளது. இதுவரை ஈரானில் 3,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். டிரம்பின் முந்தைய 10 நாள் கெடு ஏப்ரல் 6-ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இந்த புதிய எச்சரிக்கை போர் மேகங்களை இன்னும் வலுப்படுத்தியுள்ளது.

ஈரானின் புஷெர் அணுமின் நிலையம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, அங்கிருந்த தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். "எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது பேரழிவு தரும் தாக்குதல்கள் நடத்தப்படும்" என ஈரான் எச்சரித்துள்ளது.

உலக எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதத்தை கொண்டுள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருப்பது உலகப் பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.