"திமுக கொடுத்த அழுத்தமா” - தேர்தலில் போட்டியிடாதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்!
Dinamaalai April 05, 2026 07:48 PM

விசிக தலைவர் திருமாவளவன் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது குறித்து எழுந்துள்ள "திமுக அழுத்தம்" என்ற புகார்களை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது தொடர்பாகப் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,  காட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்டால் கூட்டணி நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என திமுக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாகப் பரவிய தகவல்களைத் திருமாவளவன் மறுத்துள்ளார்.

தான் தேர்தலில் போட்டியிடாதது ஒரு "அரசியல் உத்தி" என்றும், மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

"உதயநிதி ஸ்டாலினுக்குப் போட்டியாக நான் வருவேன் என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூறிய கருத்துக்கள் வெறும் அதீத கற்பனை. அதில் எள்ளளவும் உண்மையில்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தனது இடத்தைச் சமூக நீதிப் போராட்ட வீரன் மறைந்த எல். இளையபெருமாளின் மகனான ஜோதிமணிக்கு வழங்கியதற்கான காரணத்தையும் அவர் விளக்கினார்.

"தியாகி இளையபெருமாளின் குடும்பத்திற்கு மதிப்பும், மரியாதையும் தர வேண்டும் என்பதற்காகவே நான் நின்றிருக்க வேண்டிய தொகுதியை அவர்களுக்கு விட்டுக்கொடுத்தேன். இது இளையபெருமாள் அவர்களின் போராட்டத்திற்குச் செய்யும் கௌரவம்" எனத் திருமாவளவன் கூறினார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி விசிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது குறித்து எழுந்துள்ள குழப்பங்களுக்குப் பதிலளித்த அவர், இது கூட்டணித் தலைமைகள் பேசி எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக் குழப்பமும் இல்லை என்றும் உறுதியளித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.