"இதோ ஆதாரம்.. எடப்பாடி கையெழுத்திட்ட ஒப்பந்தம்!" - திருவண்ணாமலையில் பிரேமலதா ஆவேசம்!
Dinamaalai April 05, 2026 07:48 PM

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அவர் கையெழுத்திட்ட ரகசிய ஒப்பந்த நகலைத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் முன்னிலையில் வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அதிமுக - தேமுதிக இடையே போடப்பட்ட ஒப்பந்தத்தை முதன்முறையாகப் பகிரங்கப்படுத்தினார். அந்த ஒப்பந்தத்தில் தேமுதிகவிற்கு 5 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் Seat) தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜ்யசபா சீட்டிற்கான ஆண்டைக் குறிப்பிடாதது குறித்துப் பிரேமலதா கேட்டபோது, "எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்திலிருந்தே ஆண்டைக் குறிப்பிடும் வழக்கம் இல்லை; சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவோம்" என்று இபிஎஸ் உறுதியளித்ததாகப் பிரேமலதா தெரிவித்தார்.

2025-ல் ராஜ்யசபா சீட் தருவதாகக் கூறிவிட்டு, தற்போது அப்படி ஒரு வாக்குறுதியே தரவில்லை என இபிஎஸ் பொய் பேசுவதாகப் பிரேமலதா குற்றம் சாட்டினார். "அரசியல் கண்ணியம் கருதி இதுவரை இந்த ஒப்பந்தத்தை நான் வெளியே காட்டவில்லை. ஆனால், என்னை அந்த நிலைக்கு எடப்பாடி பழனிசாமி ஆளாக்கிவிட்டார்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

தேமுதிகவை 0.5 சதவீத வாக்குகள் கொண்ட கட்சி என இபிஎஸ் விமர்சித்ததற்குப் பதிலடி கொடுத்த பிரேமலதா, "ஒரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பேசுவது அரசியல் நாகரிகம் அல்ல." "தேமுதிகவை சிறுமைப்படுத்திப் பேசிய அவருக்கு, வரும் மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 'ஐசியூ' செல்லும் நிலை ஏற்படும்" என மிகக் காட்டமாகச் சாடினார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.