தலைநகர் டெல்லியில் மீண்டும் ஒருமுறை திடீர் வானிலை மாற்றம் மக்களை திணற வைத்தது. கடந்த சில வாரங்களாக குளிர் குறைந்து வெயில் அதிகரித்திருந்த நிலையில், மிதமான காற்று வீசியதால் சூடு பெரிதாக உணரப்படவில்லை.
ஆனால் நேற்று மாலை சூழல் முற்றிலும் மாறி, திடீரென பலத்த காற்று சூறாவளி போன்று வீசியது. அந்த வேகமான காற்றின் தாக்கத்தில் மண் மற்றும் தூசி மேலெழுந்து, டெல்லி முழுவதும் புழுதி மூட்டமாக மாறி கண்ணுக்குப் புலப்படாத நிலை உருவானது.
இந்த புழுதிப்புயல் காரணமாக சாலையில் சென்ற பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சமநிலையை இழந்து கடுமையாக அவதியடைந்தனர்.
நான்கு சக்கர வாகனங்களின் முன்கண்ணாடிகளில் தூசி படிந்து, ஓட்டுநர்களின் பார்வை திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது.மேலும், புயலின் தாக்கம் குறையுமுன் சில பகுதிகளில் மழையும் பெய்தது.
ஆனால் அதே நேரத்தில் காற்றின் வேகம் தளராமல் தொடர்ந்ததால், மக்கள் மேலும் சிரமத்தை சந்திக்க நேரிட்டது. இந்த திடீர் வானிலை மாற்றம் காரணமாக, டெல்லி நகரம் சில நேரம் இயல்பு நிலையை இழந்து நின்றதுபோல தோன்றியது.