மதுரை மத்திய தொகுதி வேட்பாளரும்,நடிகரும் இயக்குநருமான சுந்தர். சி தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொது மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டு அறிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சுந்தர் சி, “மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக வேட்புமனு செய்துள்ளேன். இங்கு வந்ததிலிருந்து மக்கள் எனக்கு கொடுக்கிற வரவேற்பு மற்றும் இரட்டை இலைக்கு கொடுக்கிற ஆதரவு இதையெல்லாம் பார்க்கும்போது வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மக்கள் என்னை எம்.எல்.ஏவாக்கி எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க வேண்டும். முழு பிரச்சாரம் நாளை முதல் ஆரம்பிக்க உள்ளோம். 10 வருசமாக ஒரே எம்.எல்.ஏ. இருக்கிறார். ஒரு நல்லதும் செய்யவில்லை. ஆகவே எங்களுக்கு 200% வெற்றிவாய்ப்புள்ளது. போக்குவரத்துக்கு பிரச்சனை உள்ளது. கழிவுநீர் போக்கிடத்தில் நிறைய பிரச்சனை உள்ளது. தமிழ் தலைநகரம் மதுரை இழந்த கலையை மீட்க எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். நல்லது செய்யவேண்டுமென நினைப்போர் எங்கு வேண்டுமானாலும் நின்று போட்டியிடலாம். இனி நானும் மதுரைக்காரன்தான். இங்கு வீடு பார்த்துள்ளேன். சென்னையில் இருந்து ஒரு மணிநேரத்தில் மதுரைக்கு வந்துவிடலாம். என்னுடைய பூர்வீகம் பழனி, பிழைப்புக்காக சென்னையில் உள்ளேன். இனி மதுரையில் மாதம் 15 நாட்கள் இருப்பேன். திரைத்துறையில் சாதிப்பேனா என்ற சந்தேகம் இருந்தது. ஆனால் அரசியலில் அந்த சந்தேகம் இல்லை. நிச்சயமாக 100 சதவீதம் வெற்றி பெறுவேன்” என்றார்.