சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த 39 வயது பெண்ணின் கணவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்து விட்ட நிலையில், அவரது 12 வயது மகள் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 07-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 02-ஆம் தேதி சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு சாப்பாடு எடுத்துசெல்லும் போது அதே பகுதியை சேர்ந்த ஒருவர் திடீரென அந்த சிறுமியை அழைத்து தவறான முறையில் சைகை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, இதுபற்றி உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து சிறுமியின் உறவினர்கள் சென்று அந்த நபரை சரமாரியாக தாக்கி வியாசர்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் அவரை செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சுனில் (36) என்பது தெரியவந்துள்ளது.
இவர் பாரிமுனை குடோன் தெருவில் துணிக்கடையில் வேலை செய்து வரும் நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.