விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெருந்தலைவர் காமராஜரின் பெருமைகளையும், விருதுநகர் மாவட்டத்தின் தனித்துவத்தையும் குறிப்பிட்டு அவர் உரையாற்றினார்.
பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது, ஈரோடு என்றாலே தந்தை பெரியார், காஞ்சிபுரம் என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பது போல், விருதுநகர் என்றால் அது பெருந்தலைவர் காமராஜரின் மண். இந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் சிவகாசி பட்டாசு, சாத்தூர் தீப்பெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, அருப்புக்கோட்டை என ஒவ்வொன்றும் இந்த மாவட்டத்தின் அடையாளங்கள். காலண்டர் முதல் பரோட்டா வரை விருதுநகரின் முத்திரை எங்கும் பதிந்துள்ளது” என்றார். விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி முதல்வர் வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாதனைகள் எதையும் சொல்ல முடியாமல், பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே நம்பி பரப்புரை செய்து வருவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளார். பழனிசாமி என்றாலே பொய் மற்றும் பித்தலாட்டம்தான். அரசு ஊழியர்களின் ஆதரவு அவருக்கு ஒருபோதும் கிடைக்காது. பாஜக கூட்டணியில் சேர்ந்த பிறகு, அவர்களைப் போலவே வாட்ஸ்-அப் வதந்திகளைப் பரப்புவதையே அவர் வேலையாகக் கொண்டுள்ளார். அவர் சொல்லும் பொய்களைத் தொகுத்தால் ஒரு பெரிய புத்தகமே போடலாம். மறைந்த தலைவர் கலைஞரைப் பற்றி பச்சைப் பொய் சொன்ன அவர், அதிலிருந்து தப்பிக்க மேலும் பல பொய்களைக் கூறி வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அரசியல் நிலைப்பாட்டை விமர்சித்த முதல்வர், “பாகுபலி படத்தில் சத்யராஜைப் பார்த்து ‘விசுவாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீதான் கட்டப்பா’ என்று ஒரு வசனம் வரும். அதைப்போல, ‘துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது எடப்பாடி பழனிசாமி தான்’. பாஜகவுடன் கூட்டணி வைத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கே அவர் துரோகம் செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி செய்த துரோகங்களை வேண்டுமானால் எண்ண முடியாது, ஆனால் அவரது தோல்விகளை எண்ணிவிடலாம். ஏற்கனவே 10 தோல்விகள், அடுத்தது 11-வது தோல்வி உறுதி” என்று விமர்சித்தார்.
மேலும் பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவர் இப்போது ‘பியூஸ் போன சாமி’ ஆகிவிட்டார். ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்ன குழந்தையும் சொல்லும்’ என்கிற பாடலைப் போல, இந்தத் தேர்தலின் உண்மையான ‘சூப்பர் ஸ்டார்’ திமுகவின் தேர்தல் அறிக்கைதான். அதனை நாங்கள் மக்கள் களத்தில் இறக்கியுள்ளோம்” என்றார். மேலும் மக்களின் நீண்டநாள் கோரிக்கையான திருச்சுழியில் அரசுக் கல்லூரி கட்டும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், “விருதுநகர் மக்கள் எத்தகைய திட்டங்களைக் கேட்டாலும், அதனை நான் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று உறுதியளித்தார்.