ஜனநாயகனுக்கு அனுமதி இல்ல..! ஆனா விஜய்யை விமர்சிக்கும் TN 2026 படத்துக்கு மட்டும் அனுமதியா…? தேர்தலை குறி வைத்து ரிலீஸா..? கொந்தளிப்பில் தவெகவினர்..!!!
SeithiSolai Tamil April 05, 2026 10:48 PM

உமாபதி எஸ். ராமையா இயக்கத்தில் நட்டி நட்ராஜ், தம்பி ராமையா நடித்துள்ள ‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்படத்தின் டீசர், தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்றுள்ள, “சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?”, “நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?”, “எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்?” போன்ற வசனங்கள் நேரடியாக ஒரு குறிப்பிட்ட அரசியல் மாற்றத்தைக் குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) முதல்முறையாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வரும் நிலையில், அவரை விமர்சிக்கும் விதமாகவே இப்படத்தின் காட்சிகள் அமைந்துள்ளதாக அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் காரசாரமாகப் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, படத்தில் நட்டி நட்ராஜின் தோற்றம் நடிகர் விஜய் போன்றும், தம்பி ராமையாவின் தோற்றம் தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி அக்கட்சியினர் கொதிப்படைந்துள்ளனர்.

இப்படத்தைப் பார்க்க வேண்டாம் எனத் தொண்டர்களுக்குக் கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்புகையில், “விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தடை விதித்துள்ள தணிக்கை வாரியம், அவரைச் சிறுமைப்படுத்தும் விதமாக அமைந்துள்ள இப்படத்திற்கு எப்படி அனுமதி வழங்கியது?” எனச் சாடியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “இப்படம் விஜய்யை விமர்சித்து உருவாக்கப்படவில்லை. விஜய் ஒரு சிங்கம், அவரை நாங்கள் எப்படி கிண்டலடிக்க முடியும்? இந்தப் படம் கடந்த அக்டோபர் மாதமே உருவானது. தற்போதைய அரசியல் சூழலுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளனர். மேலும் ஏப்ரல் 10-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.