254 வது முறையாக தேர்தலில் போட்டியிடும் தேர்தல் மன்னன்- விஜயை எதிர்த்து போட்டி
Top Tamil News April 05, 2026 09:48 PM

பெரம்பூரில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் ‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன்.

மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்ம ராஜன்,65 வயதான இவர் வாகனங்களுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை நடத்தி வருகிறார். 1988ஆம் ஆண்டில் இருந்து 38 ஆண்டுகளாக பல்வேறு தேர்தல்களில், குறிப்பாக நாடாளுமன்றம், சட்டமன்றம் உள்ளிட்ட பல தேர்தல்களில் போட்டியிட்டு உள்ளார். குறிப்பாக தொடர்ந்து 38 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடும் இவரை தேர்தல் மன்னன் என சமூக வலைதளங்களில் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக இவர் முன்னால் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணா நிதி, தற்போதைய முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த பிரதமர் வாஜ்பாய் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.இவர் கூட்டுறவு சங்கம் தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை போட்டியிட்டு பிரபலமடைந்தவர். தற்போதைய சட்டமன்ற தேர்தலில் மேட்டூர் மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்துள்ளார். 254வது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார் பத்மராஜன்.


ஒரு முறை கூட தேர்தலில் வெற்றிப்பெறாத பத்மராஜன், கின்னஸ் சாதனைக்காக மட்டுமே அவர் போட்டியிடுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். பஞ்சர் கடை மட்டுமே வைத்திருக்கும் தன்னிடம் நம்மளால் போட்டியிட முடியுமா என தன்னை கேலி கிண்டல் செய்ததால் தேர்தலில் போட்டியிட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.  1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ்வை எதிர்த்து போட்டியிட்ட போது பத்மராஜனை கடத்தி சென்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார், இவர் போட்டியிட்டதிலேயே 6700 வாக்குகளே அதிகபட்சமாக வாங்கி உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுவரை தேர்தலுக்காக மட்டும் 1 கோடிக்கு மேல் செலவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். விஜய் குறித்து கேள்வி கேட்டப்போது, நோ கமெண்ட்ஸ் என கூறிவிட்டு சென்றார்.  

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.